பி.எம்.கிசான் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் வரும் 31 ம் தேதி நடக்கிறது 

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகள் பயன்பெற வரும், 31 ம் தேதி சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திகுறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரதமரின் விவசாயி கவுரவ நிதித் திட்டத்தின் கீழ் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் பொது சேவை மையங்களில் வரும், 31 ம் தேதி தேதி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இத்திட்டத்திற்கான 20 வது தவணை வரும் ஜூன் மாதம் வழங்க உள்ளது. திட்டத்தில் பயன்பெறாமல் விடுபட்ட விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை பதிவு செய்திடவும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவும், இ.கே.ஒய்.சி., போன்ற அனைத்து விதமான விவரங்களையும் முழுமையாக சரி செய்து பயன்பெறலாம்.

மாவட்டத்தில் பி.எம்.கிசான் பயனாளிகள், 24,410 பேர் நில உடமைகளை பதிவு செய்யாமல் உள்ளனர்.

இவர்கள் அந்ததந்த பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்கள், பொது சேவை மையங்களில் நிலவுடைமைகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்று திட்ட பலன் அடையலாம்.

இத்திட்டத்தில் இறந்த பயனாளிகள் விவரத்தினை இறப்பு சான்றிதழுடன் வேளாண்மைத்துறைக்கு சமர்ப்பித்து நீக்கம் செய்து, வாரிசுதாரர்கள் நில உடமைகளை மாற்றம் செய்து புதிய பதிவுகள் மேற்கொண்டு பயன்பெறலாம்.

மேலும் பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளில் இறப்பு, வாரிசு சான்று பெறுதல், பெயர் மாற்றம் தொடர்பாக இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கவும், இம்மாதம் தாலுகா அலுவலகத்தில் நடக்கவுள்ள ஜமாபந்தியில் விண்ணப்பம் வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement