போலி பட்டா தயாரித்த 3 பேர் கைது
அரக்கோணம்: அரக்கோணத்தில் போலி பட்டா தயாரித்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், போலி பட்டா தயாரிப்பதாக வந்த தகவலின்படி, வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார், வி.ஏ.ஓ., லட்சுமணன் ஆகியோருடன் தாசில்தார் வெங்கடேசன், அரக்கோணம் ஹவுசிங் போர்டு பகுதியில், நித்தியானந்தம் என்பவருக்கு சொந்தமான டைலர் கடையில் நேற்று சோதனை நடத்தினார்.
ஒரு பையில் தாசில்தார், துணை தாசில்தார். அரக்கோணம் போலீஸ் டவுன் எஸ்.ஐ., மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளின் போலி முத்திரை சீல் இருந்தது.
இதுகுறித்து நித்தியானந்தத்திடம் விசாரித்ததில், அம்மனுாரை சேர்ந்த குணசேகரன், பையை இங்கு வைத்து சென்றது தெரியவந்தது. குணசேகரனிடம் விசாரித்ததில், அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜ்குமார், இந்த முத்திரைகளை பயன்படுத்தி, போலி பட்டா தயாரிப்பது தெரியவந்தது.
ராஜ்குமார் வீட்டில் தாசில்தார் நடத்திய சோதனையில், அங்கு அனைத்து துறையை சேர்ந்த, 53 போலி முத்திரைகள், கட்டு கட்டாக போலி பட்டா, போலி வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பறிமுதல் செய்தனர்.
டைலர் கடை உரிமையாளர் நித்தியானந்தம், குணசேகரன் மற்றும் ராஜ்குமார் ஆகியோரை அரக்கோணம் டவுன் போலீசில், தாசில்தார் ஒப்படைத்தார். மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.