இரட்டை கொலையால் இருதலை கொள்ளியாக போலீசார் 'ஓடவும் முடியாது; ஒளியவும் முடியாத சூழல்' என விரக்தி

ஈரோடு: சிவகிரி தம்பதி கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்கும் பணியில், ஈரோடு மாவட்ட போலீசார் ஒட்டுமொத்தமாக முனைப்பு காட்டி வரும் சூழலில், ஸ்டேஷனில் உள்ள போலீசார், பணிகளை பார்க்க முடியாமல், சிக்கித் தவிக்கின்றனர்.



சிவகிரி அருகே விளக்கேத்தி, உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்த தம்பதி, ௧௦ நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை கண்டுபிடிக்க மாவட்டத்தில் உள்ள, 36 போலீஸ் ஸ்டேஷன்களிலும் உள்ள போலீசார் சிவகிரிக்கு அழைக்கப்பட்டனர். இதனால் தற்போது ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நான்கு அல்லது ஐந்து போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். சிலர் மட்டுமே இருந்தாலும், ஸ்டேஷனிலேயே பணியை செய்யலாம் என போலீசார் நினைத்திருந்தனர். ஆனால் எதிர்ப்பார்ப்புக்கு மாறான சூழலால், பிற பணியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இதுகுறித்து சில போலீசார் கூறியதாவது: தற்போது ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நான்கு அல்லது ஐந்து போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களே இரவு, பகல் நேர பணி, சட்டம் ஒழுங்கு, மனுக்கள் விசாரணை, அடிதடி பிரச்னையில் தீர்வு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டி உள்ளது. சாப்பாட்டு நேரத்துக்கு மட்டுமே வீட்டுக்கு செல்ல முடிகிறது.
பிற நேரத்தில் ஸ்டேஷனிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம் ஏற்படுகிறது. குறைந்த போலீசாரை கொண்டு வழக்கமான பணியை பார்ப்பதே சவாலாக உள்ளது. இதில் தினமும் காலை, மாலையில் வாகன தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பணியை சில மணி நேரத்துக்கு மாற்றி விடுவதற்கு கூட போலீசார் இல்லை. கூடுதலாக போலீசார் வந்து பணியை மாற்றி விட்டால் மட்டுமே ஓய்வு கிடைக்கும் சூழல் உள்ளது. 10 நாளாக தொடர் பணியால், ஸ்டேஷனில் சிக்கி தவிக்கிறோம். இவ்வாறு கூறினர்.

Advertisement