ரூ.22,500 கோடி செலவு: சேட்டிலைட் மூலம் பாக்., பயங்கரவாதிகளை கண்காணிக்க முடிவு

83

புதுடில்லி: பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கண்காணிப்பதற்கென சேட்டிலைட் அமைக்கும் திட்டத்தை விரைவில் முடிக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனை நிறுவும் பட்சத்தில் இந்திய ராணுவத்திற்கு பெரும் உதவியாக இந்த சேட்டிலைட் திகழும் என்றும், விண்வெளியில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து நிற்கும் என்றும் விண்வெளி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


@1brகாஷ்மீரின் பஹல்காமில் 26 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் நடவடிக்கையை துவக்கியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் உளவுத்துறை முக்கிய பங்கு வகித்தது. பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடம் குறித்து சேகரிக்கப்பட்ட உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்போது இந்திய அரசாங்கம் தனது உளவுத்துறை சேகரிக்கும் சக்தியை மேலும் வலுப்படுத்த ஒரு மெகா திட்டத்தை வகுத்துள்ளது. இந்திய அரசு உளவு செயற்கைக்கோள் அமைப்பை வலுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, ஆயுதப்படைகளும் அரசும் உளவுத்துறை இயந்திரங்களை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளன.

இந்தத் திட்டத்திற்கு சுமார் 3 பில்லியன் டாலர்கள் அதாவது தோராயமாக ரூ.22,500 கோடி செலவாகும். இது விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு (SBS-3) திட்டம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இந்தத் திட்டத்திற்கு பச்சை கொடி காட்டியது.


மொத்தம் 52 உளவு செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்படும். இவற்றில், 31 செயற்கைக் கோள்களின் பொறுப்பு மூன்று தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 21 செயற்கைக்கோள்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) தயாரிக்கப்படும். இந்த செயற்கைக்கோள்களின் முக்கிய பணி இந்தியாவின் எல்லைகளைக் கண்காணிப்பதாகும், குறிப்பாக பாகிஸ்தானின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதாகும். பயங்கரவாதிகள் செயல்பாட்டை கவனிக்க முடியும்.

செயற்கைக்கோள்களை விரைவாக உருவாக்க, அனந்த் டெக்னாலஜிஸ், சென்டம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. முன்னதாக இந்த நிறுவனங்களுக்கு நான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது, ஆனால் இப்போது அது 12 முதல் 18 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் 2026 அல்லது அதற்கு முன்னர் தயாராகும். இந்தத் திட்டத்தின் முக்கிய தேவையை கருத்தில் கொண்டு அரசாங்கம் விரைந்து முடிக்க கோரியுள்ளது.



இஸ்ரோவின் விண்வெளி மையம்

இந்த உளவு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையம் , அல்லது எலோன் மஸ்க்கின் நிறுவனமான SpaceX இன் ராக்கெட். இஸ்ரோவின் கனரக ராக்கெட் (LVM3) உள்ளிட்ட ராக்கெட்டுகளின் உதவியுடன், செயற்கைக்கோள்கள் விண்வெளியில் உள்ள அவற்றின் சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.



இது ஒரு வரப்பிரசாதம்



இது நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உள்கட்டமைப்பையும் மேம்படுத்தும். இது போன்ற சேட்டிலைட்டுகள் ரஷ்ய , உக்ரைன் போரில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கும் ஒரு பெரிய வாய்ப்பாகும், விண்வெளித் துறையில் இந்தியா மேலும் முன்னேற உதவும். செயற்கைக்கோள் அமைப்பு இந்தியாவிற்கு ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும் என நிபுணர் ஒருவர் கூறினார்.

Advertisement