அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட்டேன்: பெருமிதமாக சொல்கிறார் டிரம்ப்

நியூயார்க்: ''இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தி விட்டேன்,'' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது மட்டுமே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவில் பொதுமக்கள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டது.
இதற்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்தது. இந்நிலையில், அமெரிக்க அரசு தரப்பில் மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதை அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று அவர் கூறியதாவது:இந்த வாரத்தில், இந்தியா பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுத மோதல் ஏற்பட இருந்ததை எனது நிர்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது. அது மிகவும் மோசமான அணு ஆயுதப் போராக இருந்திருக்கும்.
பல லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். இதற்கான முயற்சிகளை மேற்கொண்ட துணை அதிபர் வேன்ஸ், வெளியுறவு அமைச்சர் ரூபியோ ஆகியோருக்கு நன்றி கூற விரும்புகிறேன்.நிலைமையின் தீவிரத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் உணர்ந்து கொண்டனர். அவர்களுக்கு நாங்களும் உதவி செய்தோம். நாங்கள் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்ய இருக்கிறோம், எனவே இந்த போரை நிறுத்திக்கொள்வோம் என்று கூறினேன்.
நீங்கள் போரை நிறுத்தாவிட்டால் நான் உங்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டேனெ என்று கூறினேன். இந்த வகையில் வர்த்தகத்தை யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.அப்படி கூறிய உடனே அவர்கள், போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டார்கள். அது நிரந்தரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு டிரம்ப் கூறினார்.











