'பயங்கரவாதி பதுங்குமிடங்களை அடையாளம் காட்டியது இஸ்ரோ'
''பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை அடையாளம் காட்டியது நம்முடைய செயற்கைக்கோள்கள்,'' என, இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
திரிபுரா மாநிலத்தின், அகர்தலாவில் உள்ள கேந்த்ரிய விவசாய பல்கலைக்கழகத்தில், ஐந்தாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேசியதாவது:
நம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நினைத்தால், அதை எங்களின் செயற்கைக்கோள்கள் மூலமாக செய்ய வேண்டும். 7,000 கி.மீ., கடற்பகுதியை கண்காணிக்க வேண்டும். செயற்கைக்கோள்கள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பம் இல்லாமல், எதையும் சாதிக்க முடியாது.
போர் சூழல் உருவானபோது, இந்திய ராணுவம், பெங்களூரில் தலைமை அலுவலகம் வைத்துள்ள, இஸ்ரோ நிறுவனத்திடம் உதவி கேட்டது. எனவே 10 செயற்கைக்கோள்கள் மூலமாக, இஸ்ரோ கண்காணித்தது.
செயற்கைக்கோள்கள் பாகிஸ்தான் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்கள், அந்நாட்டு ராணுவ முகாம்களை போட்டோக்களுடன் அடையாளம் காட்டின. இதன் அடிப்படையில், நம் ராணுவம் குறிவைத்து பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -