துருப்பிடித்த டேங்கர்களில் தண்ணீர்; பெங்களூரு குடிநீர் வாரியம் மறுப்பு
பெங்களூரு : துருப்பிடித்த டேங்கர்களில், அசுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதியின் குற்றச்சாட்டை, பெங்களூரு குடிநீர் வாரியம் மறுத்துள்ளது.
தனியார் டேங்கர்களை கட்டுப்படுத்தும் நோக்கில், பெங்களூரு குடிநீர் வாரியம் 'நடமாடும் காவிரி' திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்தை சில நாட்களுக்கு முன்புதான், துணை முதல்வர் சிவகுமார் துவக்கி வைத்தார். குடிநீர் தேவைப்படுவோர், ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அவர்களின் வீட்டு வாசலுக்கு சுத்தமான காவிரி நீர் சென்றடையும்.
நடமாடும் காவிரி குடிநீர் வழங்கும் டேங்கர்களை, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமி ஆய்வு செய்தார். டேங்கர்கள் துருப்பிடித்திருப்பது தெரிந்தது.
'இத்தகைய டேங்கர்களில் அசுத்தமான குடிநீர் வழங்குகின்றனர். மக்களின் உயிருடன் காங்கிரஸ் அரசு விளையாடுகிறது' என, அவர் குற்றஞ்சாட்டினார். அவரது குற்றச்சாட்டை பெங்களூரு குடிநீர் வாரியம் மறுத்துள்ளது.
குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சமீப நாட்களில் பெங்களூரு குடிநீர் வாரியம், புதிதாக எந்த டேங்கர்களும் வாங்கவில்லை. பொருளாதார சுமையை தவிர்க்கும் நோக்கில், ஏற்கனவே குடிநீர் வாரியத்திடம் இருந்த 60 டேங்கர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட டேங்கர்கள், தனியாரிடம் வாடகைக்கு பெறப்பட்டன.
இவை தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்க, வேறு வர்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய நடவடிக்கையால், குடிநீர் வழங்கும் டேங்கர்களை அடையாளம் காண்பது, எளிதாக இருக்கும்.
டேங்கர் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் காவிரி நீர் தொடர்பு மையங்களை தவிர, வேறு இடங்களில் நீர் நிரப்புவதை தடுக்கலாம்.
அனைத்து டேங்கர்களுக்கும், ஜி.பி.எஸ்., டிராக்கிங் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. டேங்கர் குடிநீர் வாரியத்தின், காவிரி தொடர்பு மையங்களில் நீர் நிரப்பி, அவற்றை நேரடியாக மக்களுக்கு சென்றடைந்ததை உறுதிப்படுத்தலாம்.
ஒவ்வொரு விஷயத்திலும், மக்களின் நலனை மனதில் கொண்டு, குடிநீர் வாரியம் திட்டங்களை செயல்படுத்துகிறது. எம்.எல்.சி., சலவாதி நாராயணசாமியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
