நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு; வாகன நெரிசல் அதிகரிப்பு

பல்லடம், ; நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக, ரோடு சுருங்கி வருகிறது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஆக்கிரமிப்புகள் பெருகி வருகின்றன.

பல்லடத்தில், கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை உட்பட, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, கொச்சி உள்ளிட்ட மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளன. பல்லடம் நகரப் பகுதி வழியாக செல்லும் இந்த அனைத்து நெடுஞ்சாலைகளும் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்தவை.

நெடுஞ்சாலைகளில், வாகனங்கள் இடையூறின்றி செல்வதற்கு வசதியாக குறிப்பிட்ட அளவில் ரோடுகள் அமைக்கப்படுகின்றன. மேலும், ரோட்டின் இருபுறமும் தேவையான இடைவெளி விட்ட பின்னரே ரோடுகள் போடப்படுகின்றன. வாகனங்கள் பார்க்கிங் செய்யவும், பாதசாரிகள் நடந்து செல்லவும் இந்த இடைவெளிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பல்லடத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், ரோட்டின் இருபுறமும் உள்ள இடைவெளிகள் மாயமாகி வருகின்றன. ஆக்கிரமிப்புகள் புதிது புதிதாக முளைப்பதால், ரோடு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. இதனால், வாகனங்கள் ரோட்டில் பார்க்கிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

பாதசாரிகள் நடந்து செல்லவும் இடம் இன்றி, ரோட்டில் செல்வதால் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. அதிகாரிகளும், ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாமல் இருப்பதால், வாகன நெரிசலும், விபத்து அபாயமும் அதிகரித்து வருகிறது.

பல்லடத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள், உரிய வாய்ப்பு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

Advertisement