பழைய எண் கொண்ட வீட்டை ஒதுக்க கோரி மறியல் முயற்சி
ஈரோடு :ஈரோட்டில் பவானி சாலை, அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு, 35 ஆண்டுகளுக்கு முன் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டது. வீடுகள் சேதமானதால் ஆறு ஆண்டுக்கு முன் இடிக்கப்பட்டு, அடுக்குமாடி வீடு கட்டினர். இந்த குடியிருப்பில் குலுக்கல் மூலம் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்கின்றனர். முன்பு மூன்று மாடியுடன், 228 வீடுகள் இருந்தன.
அதில் வசித்தோர், இன்னும் அதே விலாசத்தில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளனர். தற்போது ஐந்து மாடியுடன், 300 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் ஏற்கனவே வசித்தோர், தாங்கள் முன்பு வசித்தே அதே எண்ணுடைய வீட்டை ஒதுக்குமாறும், தங்களுக்கான ஒதுக்கியது போக மீதி வீடுகளை மற்றவர்களுக்கு வழங்கலாம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
குலுக்கல் மூலம் வழங்குவதால், தரைத்தளத்தில் முன்பு வசித்து, 60 முதல், 75 வயதான பலருக்கு 3, 4, 5ம் தளம் ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கதளால், 4, 5ம் தளம் செல்ல இயலாது எனக்கூறி வருகின்றனர். இந்நிலையில் பவானி சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட முயன்றனர். டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டரிடம் வழங்குவதாக கூறி, மக்களிடம் கோரிக்கை மனு பெற்றதால், மறியல் முயற்சி கைவிடப்பட்டது. பின் அதே பயனாளிகள், கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனுவாக வழங்கி விளக்கினர்.