ஒரு நாள் வேலை நிறுத்தம்



தர்மபுரியில் ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்ககோரி, ஒரு நாள் வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தர்மபுரி கட்டட பொறியாளர்கள் சங்கம் சார்பில், நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகள் கருணாகரன், மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், கல் குவாரி உரிமையாளர்கள் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள் விலையை அபரீதமாக தொடர்ந்து உயர்த்தி வருகிறார்கள். குறுகிய காலத்தில் கிரஷர் பொருட்களின் விலையை யூனிட்டுக்கு, 3,000 ரூபாய் வரை உயர்த்தி உள்ளார்கள். இது, 100 சதவீத விலை உயர்வாகும். இந்த விலை உயர்வால் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், கட்டடடம் கட்டும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, கிரஷர் உரிமையாளர்கள் அநியாயமான விலை உயர்வை திரும்ப பெறுவதுடன், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறப்பதுடன், கட்டுமான பொருட்களை அத்தியாவசியப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். மேலும், கட்டுமான பொருட்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


* கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், கட்டுமான பொறியாளர் சங்கம் மற்றும் கட்டுமான தொழில் அமைப்புகள் சார்பில், நேற்று மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. முன்னாள் மாநிலத் தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். சேர்மன் விஸ்வநாதன், கிருஷ்ணகிரி அசோசியேசன் தலைவர் தணிகாசலம், செயலாளர் குமார், பொருளாளர் காமராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement