பாதாள சாக்கடையில் விஷவாயு கசிவா?
விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. அடைப்புகளை உரிய முறையில் சரிசெய்யாததால், பாதாள சாக்கடை கழிவுகள் சாலையில் வழிந்தோடுகிறது.
வீடுகளின் கழிப்பறைகளிலும், கழிவுநீர் நிரம்பி கடும் துர்நாற்றம் வீசுகிறது. விழுப்புரம் நகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்வதற்கு பதில், தற்காலிக ஏற்பாடாக, பாதாள சாக்கடை மேன்ஹோல்களில் இயந்திரம் பொருத்தி கழிவு நீரை சாலையோர வாய்க்கால்களில் விட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வெளியேறி மக்கள் பாதிப்பதாக கூறி அப்பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில்;
விழுப்புரம் நகரில் 17 வது வார்டுக்கு உட்பட்ட தாமரைக்குளம் பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாணிக்கம் மனைவி தவமணி என்ற பெண், விஷவாயு தாக்கி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பாதாள சாக்கடை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதோடு பாதித்த பெண்ணுக்கு இழப்பீடு தர வேண்டும். இது குறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. நகராட்சி ஆணையர், கவுன்சிலருக்கு மனு அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை.
விரைவில் நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.