சாயல்குடி அருகே கடலில் சிவபெருமான் வலைவீசும் படலம்

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாரியூரில் பவள நிற வல்லியம்மன், பூவேந்திய நாதர் கோயில் சித்ரா பவுர்ணமி விழாவில் கடலில் சுவாமி வலைவீசி சுறாவை பிடிக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது.

மாரியூரில் பவள நிற வல்லியம்மன், பூவேந்திய நாதர் கோயில் வருண பகவானால் பூஜிக்கப்பட்ட சிவாலயம்.

இங்கு மே 3ல் சித்ராபவுர்ணமி விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நேற்று பவுர்ணமியை முன்னிட்டு காலையில் மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் வலை வீசும் படலம் நிகழ்ச்சி கடலுக்குள் நடந்து. சிவபெருமான் வேடமணிந்த குருக்கள் நாட்டுப் படகில் இருந்து கடலுக்குள் வலையை வீசினார்.

அப்பொழுது தொல்லை தந்த சுறா மீன் (பொம்மை வடிவம்) வலையில் சிக்கியது. கரைக்கு கொண்டுவரப்பட்டு சுறா மீன் வதம் செய்யப்பட்டு சாப விமோசனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ரிஷப, சிம்ம வாகனத்தில் வந்திருந்த பூவேந்தியநாதர், பவள நிறவல்லியம்மன் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு மாரியூர் கோயிலுக்கு வந்தடைந்தது.

காலை 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பந்தலில் சுவாமி, அம்பாள், பிரியாவிடை ஆகிய தெய்வங்களுக்கு கோயில் சிவாச்சாரியார்கள் திருமாங்கல்ய நாண் சூட்டினார். பக்தர்களின் மீது அட்சதை துவங்கப்பட்டது. அருகே சுவாமி அம்பாளுக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. பக்தர்களுக்கு தாம்பூல பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு கைலாய வாத்தியம் முழங்க சுவாமி. அம்பாளுக்கு பள்ளியறை பூஜை நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர், பவளம் மகளிர் குழுவினர் செய்தனர்.

Advertisement