'டிஜிட்டல்' கைது செய்ய லக்னோவில் பயிற்சி: கைதான பெண் வாக்குமூலம்

சென்னை : 'ஆன்லைன் வாயிலாக டிஜிட்டல் கைது செய்து, பண மோசடி செய்வது தொடர்பாக, உ.பி., மாநிலம் லக்னோவில் பயிற்சி அளித்தனர்' என, கைதான பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வேலுாரைச் சேர்ந்த 66 வயது நபரை, ஆன்லைன் வாயிலாக மர்ம நபர்கள் 'டிஜிட்டல் கைது' செய்து, 81.68 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இது குறித்து, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக போலீசார் விசாரித்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த ஷோபனா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
போலீசாரிடம் ஷோபனா அளித்துள்ள வாக்குமூலம்:
என் சகோதரர் சுரேஷ், ஆன்லைன் விளையாட்டிற்கு வங்கி கணக்கை வாடகைக்கு விட்டால், கமிஷன் தொகை கிடைக்கும் என்று ஆசைகாட்டினார். ஆனால் அவர், சைபர் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்து உள்ளார். அவர்களுடன் சேர்ந்து மோசடி செய்யும் பணத்தை பெற, என் வங்கி கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.
என் கணவர் கார்த்திக், மாற்றுத்திறனாளி. நாங்களும் கமிஷன் தொகைக்கு ஆசைபட்டு, சைபர் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்து வந்தோம். எங்களுடன் சேர்ந்து, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கால்நடை தீவன வியாபாரி செந்தில்குமாரும் மோசடியில் ஈடுபட்டு வந்தார்.
எங்களுக்கு பியுஷ் என்பவர் தலைவராக செயல்பட்டு வந்தார். மோசடி செய்யும் பணத்தில் எங்களுக்கு, 100 ரூபாய்க்கு 2 ரூபாய் என்ற விகிதத்தில் கமிஷன் தொகை கொடுப்பார்.
என் கணவரை, உ.பி., மாநிலம் லக்னோ வரச் சொன்னார். அவர் மாற்றுத்திறனாளி என்பதால், லக்னோ செல்வது சிரமம். இதனால், எங்கள் கும்பலில் பிரபு என்ற நபர் உள்ளார். அவர் ஓட்டுநர் என்பதால், அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு சென்று வருவார்.
அவரை லக்னோ அனுப்பினோம். ஆன்லைன் வாயிலான டிஜிட்டல் கைது செய்வது எப்படி என்ற பயிற்சி அவருக்கு அளிக்கப்பட்டது. அவர் வந்து எங்களுக்கு பயிற்சி அளித்தார். அதன்படி, பெங்களூரு போலீஸ் போல நடித்து, வேலுாரைச் சேர்ந்த நபரிடம் 81.68 லட்சம் ரூபாய் மோசடி செய்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




