மதுரை - தேனி பைபாஸ் ரோட்டில் மேம்பால பணிகள் துவக்கம்

மதுரை : மதுரை - தேனிக்கான பைபாஸ் ரோட்டில் மேம்பாலத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன. நிலம் எடுப்பு பணிகள் சுணக்கமாவதால், ரோடு பணி முடிய தாமதமாக வாய்ப்புள்ளது.

மதுரையில் இருந்து காளவாசல், நாகமலை புதுக்கோட்டை வழியாக தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலை குறுகலாகவும், வளைவு, நெளிவுடனும் உள்ளது. இதனால் போக்குவரத்து தாமதம், நெரிசல் என பிரச்னை உருவாகிறது. எனவே தேனி ரோட்டில் பைபாஸ் ரோடு அமைக்க முடிவானது.

இதையடுத்து எச்.எம்.எஸ். காலனி முதல் கொக்குளப்பி வழியாக, நான்குவழிச் சாலையை கடந்து நாகமலைபுதுக்கோட்டை வரை 3.5 கி.மீ., தொலைவுக்கு பைபாஸ் ரோடு அமைக்க டெண்டர் விடப்பட்டது.

இதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 260 கோடி. இதில் ரோடு பணிக்கு ரூ.124 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதியில் திருமங்கலம் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையை கடக்கும் இடத்தில் ரூ.70 கோடி செலவில் 950 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைய உள்ளது. ரோட்டின் அகலம் 30 மீட்டர். பாலத்தின் அகலம் 45 மீட்டராக இருக்கும்.

ரோடு பணிக்காக கொக்குளப்பி, நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் நிலங்களை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அந்த நிலங்களில் வீடுகள் கட்டி குடியிருப்போருக்கு இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. இதற்காக மீதித் தொகை செலவிடப்பட உள்ளது.

இந்த பைபாஸ் ரோடு பணிகளின் திட்ட காலம் 24 மாதங்கள். கடந்தாண்டு செப்டம்பரில் துவங்கிய இப்பணியில், 2 கி.மீ., தொலைவுக்கு ரோடு அமைக்கப்பட்டுள்ளது. மேம்பால பணிக்கு துாண்கள் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகின்றன. இந்த ரோடு பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ.50 கோடி வரை முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது.

மீதி பணிகளை வருவாய்த்துறையினருடன் இணைந்து செயல்படுத்த வேண்டும். ஆனால் இப்பணிகள் மிகவும் மந்தமாக நடக்கிறது.

பணிக்காலத்தில் ஏற்கனவே 8 மாதங்கள் முடிவடைந்து விட்டன. நிலஎடுப்பு பணிகளுக்கு இழப்பீடு தொகையை ஒதுக்கி, உரியவர்களுக்கு வழங்க தாமதமானால் குறிப்பிட்ட காலங்களில் பணிகள் முடிவடைவது மேலும் தாமதமாகும்.

நிலஎடுப்பு பணிகளுக்கு இழப்பீடு தொகையை ஒதுக்கி, உரியவர்களுக்கு வழங்க தாமதமானால் குறிப்பிட்ட காலங்களில் பணிகள் முடிவடைவது மேலும் தாமதமாகும்.

Advertisement