அலைக்கழிக்கும் ரேஷன் கடை விற்பனையாளர்கள்; கைரேகை பதியாவிட்டால் கார்டு பறிபோகும் ஆபத்து

மதுரை: கூட்டுறவு துறை ரேஷனில் அத்யாவசியப் பொருட்கள் கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்யாமல் கடை விற்பனையாளர்கள் அலைக்கழிக்கின்றனர்.
கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆதார் எண்ணுடன் கைரேகை, கருவிழி பதிவு செய்திருக்க வேண்டும். இ.கே.ஒய்.சி., முறையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையை மே 31க்குள் பதிவு செய்ய வேண்டும். இதை வைத்தே ஒவ்வொரு குடும்பத்தினருக்கான அரிசி, பிற மானியத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்து மாநில அரசுக்கு வழங்கும். இதற்கான கைரேகை பதிவு அனைத்து ரேஷன் கடைகளிலும் நடக்கிறது. நகர்ப்புற ரேஷன் கடைகளில் சில விற்பனையாளர்கள் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்ய சென்றால் 'பொருட்கள் இருப்பு இல்லை. 'நாளைக்கு வாங்க' என திருப்பி அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அனைத்து உறுப்பினர்களும் கைரேகை பதிவு செய்தால் தான் மானிய விலையிலான பொருட்கள் கார்டுதாரர்களுக்கு முழுமையாக கிடைக்கும். பெரும்பாலாலும் பெண்களே மாதந்தோறும் சென்று பொருட்களை வாங்குகின்றனர். அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆதார் அட்டையுடன் ரேஷன் கடையில் பதிவு செய்தால் தான் ஆதார் பதிவு செய்யப்பட்டது என தகவல் வரும். விற்பனையாளர்கள் அலைக்கழிப்பதால் குடும்ப உறுப்பினர்கள் தினமும் வந்து செல்ல முடியாமல் கைரேகை பதிவை தவற விடுகின்றனர். 'இதே வேலையா போச்சு' என கார்டுதாரர்கள் புலம்புகின்றனர்.
பொது விநியோகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொருட்கள் இருப்பு இருந்தால் தான் கை ரேகை பதிய முடியும் என்பது தவறான கருத்து. எல்லா பொருட்களுமே கடைகளுக்கு சீராக வழங்கப்படுகிறது. கைரேகை விழாவிட்டால் குறைந்தது கருவிழி ரேகையை பதிவு செய்ய வேண்டியது விற்பனையாளரின் கடமை. இதுகுறித்து தாசில்தார்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்படும். கார்டுதாரர்களை அலையவிடும் விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கார்டுதாரர்கள் தாமதமின்றி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையோடு சென்று விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்றார்.