நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்... துவங்கியது; 31ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி: நீட் அல்லாத அனைத்து படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் சென்டாக் ஆன்லைனில் நேற்று துவங்கியது. வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள இடங்கள் சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகின்றது. இந்தாண்டிற்கான சென்டாக் விண்ணப்பம் ஆன்லைனில் நேற்று மாலை 3 மணி முதல் துவங்கியது. இது குறித்த தகவல் குறிப்பேட்டை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டு கூறியதாவது:
2025-26ம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத இளநிலை தொழிற்படிப்புகள், கலை அறிவியல், வணிகவியல், நுண்கலை படிப்புகளுக்கான சென்டாக் ஆன்லைன் விண்ணப்பம் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் இன்று (நேற்று)12ம் தேதி மாலை 3:௦௦ மணி முதல் துவங்கியது. எனவே, நீட் அல்லாத இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். குறிப்பாக நீட் அல்லாத யூ.ஜி., தொழில் முறை படிப்புகளாக பி.டெக்., பி.ஆர்க், பி.எஸ்சி., வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்சி.,(கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி., நர்சிங்., பி.பி.டி., பி.எஸ்சி., துணை மருத்துவ டிப்ளமோ படிப்புகள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஆறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் சொசைட்டி கல்லுாரிகளில் உள்ள பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளநிலை கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம். இதேபோல் பாரதியார் பல்கலை கூடத்தில் உள்ள பி.பி.ஏ., பி.வி.ஏ., உள்ளிட்ட நுண்கலை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
பிற மாநில மாணவர்கள்
இளநிலை நீட் அல்லாத தொழில்முறை மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கும் பிற மாநில ஒதுக்கீடு உள்ளது. எனவே, தகுதியான பிற மாநில மாணவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர், ஓ.சி.ஐ., விண்ணப்பதாரர்களும் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சுய நிதி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக காமராஜர் அரசு இன்ஜியரிங் கல்லுாரியில் உள்ள பி.டெக்., இடங்கள், மகளிர் இன்ஜினியரிங் கல்லுாரி, புதுச்சேரி தொழில்நுட்ப கல்லுாரில் உள்ள ஜோஸா இடங்கள், பி.எஸ்சி., வேளாண்மை தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., பி.எஸ்சி., துணை மருத்துவ படிப்புகள், பி.பார்ம் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். நீட் அல்லாத தொழில் முறை படிப்புகளில் 6257 இடங்கள், கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளில் 4320 படிப்புகள் என மொத்தம் 10,577 படிப்புகள் உள்ளன என்றார்.
சென்டாக் அதிகாரிகள் கூறும்போது, தற்போது நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகின்றது. அடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்கப்படும் என்றனர்.
நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்முறை டிகிரி, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கலை அறிவியல், வணிகவியல், நுண் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளிகளுக்கு 150 ரூபாய், இதர பிரிவினருக்கு 300 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.தொழில்முறை டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புளுக்கு சேர்த்து விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., மற்றும் ஓ.சி.ஐ., ஸ்பான்சர்டு பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும்
-
இந்தோனேசியாவில் வெடிகுண்டு வெடித்து 13 பேர் பலி
-
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி; 6 பேர் கவலைக்கிடம்
-
தகிக்கும் வெயிலால் தவிக்கும் ஒடிசா; 17 நகரங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
-
எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்!
-
போலீஸ் செய்திகள்...
-
குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவர் புகார்