மே மாதத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு யோசிக்கலாமே ; விடுமுறை காலங்களில் நடத்த ஒருமித்தமாக வலியுறுத்தல்

வேடசந்துார்: 2025 - -26 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் கலந்தாய்வு இடம் மாறுதலை பழைய முறைப்படி மே யில் நடத்துவதோடு, அரசின் 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக அரசு ஒவ்வொரு கல்வி ஆண்டின் முடிவில் விடுமுறை மாதமான மே மாதத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இடமாறுதலை வழக்கமாக நடத்தி வந்தது. இதனால் ஆசிரியர்கள் அலைச்சல் இன்றி பயன் பெற்றனர். தற்போது இந்த கலந்தாய்வு தள்ளி செல்கிறது.
ஜூன் 2-ல் மீண்டும் பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டிற்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தொடக்க கல்வித் துறையில் வட்டார கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு ஜூன் 16 ல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு சார்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 2024ல் இடம் மாறுதல் மட்டுமே வழங்கப்பட்டது. பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கும் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விரைந்து வழங்கினால் பதவி உயர்வு பெற்றுச் செல்வோர் பயன்பெற முடியும்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் நாளில் இலவச பாடப்புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன. ஆனால் அதை முறையாக பெற்று மாணவர்களுக்கு வழங்க போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை பல்வேறு பள்ளிகளில் தொடர்கிறது. தொடக்க கல்வித்துறையை பொறுத்தவரையில் (அரசாணை 243) மாநில முன்னுரிமை படி மாறுதல் வழங்கப்படுகிறது. இதை எதிர்த்து ஜாக்டோ ஜியோ ,டிடோஜாக் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர்.ஆனால் தமிழக அரசு 243 ஐ மாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த கல்வி ஆண்டிலாவது ஆசிரியர்களின் அதிருப்தியை போக்கி மீண்டும் பழைய முறைப்படி கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.
..........
நடப்பு மாதத்திலே நடத்துங்க
ஒன்றிய, மாவட்ட அளவில் இடமாறுதல் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மாநில அளவில் ஒட்டுமொத்தமாக இடமாறுதல் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக அரசு அறிவித்துள்ள அரசாணை 243 ஐ ரத்து செய்ய வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மே மாதம் துவங்கி இரு வாரங்களான நிலையில் இன்னும் கல்வித்துறை சார்பாக மாறுதல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. நடப்பு மாதத்தில் கலந்தாய்வு நடத்த வேண்டும். இல்லை என்றால் ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார். ஆசிரியர்களின் குழந்தைகளும் பள்ளி கல்லுாரிகளில் படித்து வருகின்றனர். இடமாறுதல் தெரிந்தால் தானே வீடு மாற்றுவதற்கு மாற்று சான்றிதழ் பெற்று மற்ற இடங்களுக்கு செல்வது வசதியாக இருக்கும். ஆசிரியர்களின் நலன் கருதி அரசு யோசித்து நடப்பு மே மாதத்திலேயே கலந்தாய்வு நடத்த முன்வர வேண்டும்.
வி.கோபிநாதன், மாவட்ட தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, வேடசந்துார்.
...........