தெருவிளக்கு ஒயரில் புகை அச்சத்தில் பொது மக்கள்

மேலுார்: மேலுார் அருகே நாவினிபட்டியில் தெரு விளக்கு மின்ஒயர் துண்டாகி காப்பர் வயர் வெளியே தெரிவதால் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

இங்குள்ள நெடுஞ்சாலையில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் ரூ. 119 கோடியில் புதிய பாலம் மற்றும் ரோட்டை தரத்தை உயர்த்தி 7 ஆண்டுகள் பராமரிக்க தனியார் நிறுவனத்திடம் மாநில நெடுஞ்சாலை துறை ஒப்பந்தம் செய்துள்ளது. நெடுஞ்சாலையில் 27 தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ் விளக்குகளுக்கு செல்லும் மின்ஒயர் பூமிக்குள் பதிக்கப்பட்டு தெருவிளக்கின் கீழ் பகுதி வழியாக இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின்விநியோகம் இருந்தாலும் விளக்குகள் எரியவில்லை. இதில் ஒரு விளக்கிற்கு மின்சாரம் செல்லும் காப்பர் ஒயர் சிதிலமடைந்து காவு வாங்க காத்திருப்பது போல் உள்ளது.

சமூக ஆர்வலர் சம்சுதீன்: தெருவிளக்குக்கு மின்சாரம் செல்லும் கேபிள் ஒயர் உருகி காப்பர் கம்பிகள் வெளியே தெரிவதோடு புகை வெளியேறுகிறது. இதனருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ளது.

மேலும் நாவினிபட்டியில் மட்டும் 31 தெரு விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.

பாதிப்பு குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் கிஷோர் கூறுகையில், ''விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

Advertisement