கூட்டுறவு கல்லுாரியில் சேர்க்கை துவக்கம்

செம்பட்டி : ஆத்துார் கூட்டுறவு கல்லுாரி சேர்க்கைக்காக வெளிமாவட்ட மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

ஆத்துார் ஒன்றியம் சீவல்சரகு ஊராட்சியில் கூட்டுறவுத்துறை சார்பில் கலை அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. கூட்டுறவு இணை பதிவாளர் சுகாசினி தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, விண்ணப்ப வினியோகத்தை துவக்கி வைத்தார். கல்லூரி நிர்வாக அலுவலர் கணேசன், முதல்வர் பாலகுருசாமி முன்னிலை வகித்தனர்.

நிர்வாக அலுவலர் இரா.கணேசன் கூறுகையில், ''அமைச்சர் ஐ பெரியசாமி தேர்தல் வாக்குறுதிப்படி அரசு கலை கல்லுாரி , கூட்டுறவு கலை அறிவியல் கல்லுாரி உருவாகி உள்ளது . கூட்டுறவு கல்லுாரிக்கு 77 கோடி ரூபாயில் வெளிநாட்டு கலை நுட்ப அமைப்புகளில் புதிய கட்டட பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் புதிய கட்டடத்தில் கல்லுாரி செயல்பட உள்ளது.

தற்போது 14 பாடப்பிரிவுகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2ம் ஆண்டில் 596 மாணவர்களும், 3ம் ஆண்டில் 244 மாணவர்களும் படிக்கின்றனர். மே 30 வரை விண்ணப்ப வினியோகம் நடக்கும். திண்டுக்கல் மட்டுமின்றி தேனி, மதுரை, விருதுநகர், கரூர் மாவட்ட மாணவர்களும், ஆர்வத்துடன் விண்ணப்பிக்க முன் வருகின்றனர் ''என்றார்.

Advertisement