சென்டாக் பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு எழுத 15ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம் விநியோகம்
புதுச்சேரி : சென்டாக் பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் சுகாாதார துறையின் பொது நுழைவு தேர்வு எழுதினால் மட்டுமே சேர முடியும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் 15ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றது.
புதுச்சேரியில் கடந்த காலங்களில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கான சேர்க்கை, மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் நிரப்பட்டது. இதற்கிடையில், இந்திய நர்சிங் கவுன்சில் கடந்த 08.04.2023 தேதி வெளியிட்ட கடிதத்தின் மூலம் பி.எஸ்.சி., நர்சிங் சேர்க்கைக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கியது.
இதனால் புதுச்சேரி சுகாதார துறையின் நர்சிங் கவுன்சில் வழியாக பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் சேர பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகின்றது.
இந்தாண்டிற்கான பி.எஸ்சி., நர்சிங் பொது நுழைவு தேர்வு ஜூன் 29ம் தேதி நடக்கின்றது. சென்டாக் இணையதளத்தில் வரும் 15ம் தேதி காலை 10 மணி முதல் 30ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த நுழைவு தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மட்டுமே சென்டாக் மூலம் பி.எஸ்சி., படிப்புகளில் சேர முடியும்.
இருப்பினும் இந்திரா காந்தி அரசு செவிலியலர் கல்லுாரி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மதர்தெரசா செவிலியர் கல்லுாரியில் உள்ள நிர்வாக இடங்கள், என்.ஆர்.ஐ., இடங்களுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கும்.
அதேபோல் மாநிலத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லுாரியில் உள்ள நிர்வாக இடங்களுக்கு தனியாக நுழைவு தேர்வு நடக்க உள்ளது.
இது குறித்து மாணவர் பெற்றோர் சங்க தலைவர் பாலா சுப்ரமணியன் கூறும்போது, தமிழகத்தில் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு சேர்க்கை நடக்கின்றது. ஆனால் புதுச்சேரியில் அதே நர்சிங் படிப்பிற்கு நுழைவு தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடக்கின்றது.
இது வருத்தம் அளிக்கின்றது. இது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் நர்சிங் படிப்பினை தேர்வு செய்வதை பாதிக்கும். இது தொடர்பாக புதுச்சேரி அரசு தெளிவாக முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திரா காந்தி அரசு கல்லுாரியில் 50 செவிலியர் இடங்கள், மதர்தெரசா செவிலியர் கல்லுாரியில் புதுச்சேரியில் 64 இடங்கள், காரைக்காலில் 32 இடங்கள் உள்ளன. இது தவிர தனியார் செவிலியர் கல்லுாரியில் 350 இடங்கள் உள்ளன. ஒட்டுமாத்தமாக 496 நர்சிங் இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் உள்ளன.
சுகாதார துறை வெளியிட்ட நர்சிங் பொது நுழைவு தேர்வு அறிவிப்பில் நர்சிங் நுழைவு தேர்விற்கு வரும் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆனால் வரும் 29 ம் தேதி நர்சிங் பொது நுழைவு தேர்வு எழுத வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை கண்ட மாணவர்கள், பெற்றோர் கடும் குழப்பம் அடைந்தனர். அதை தொடர்ந்து தவறை உணர்ந்த சுகாதார துறை மறு அறிவிப்பினை வெளியிட்டது. ஜூன் 29 ம்தேதி நர்சிங் நுழைவு தேர்வு நடக்கும் என அறிவித்தது.