பரமக்குடியில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்; பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி எதிர்சேவை

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் நேற்று அதிகாலை இறங்கினார்.

பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக அனைத்து விழாக்களும் நடக்கிறது. இதன்படி மே 7ல் காப்பு கட்டுகளுடன் சித்திரை திருவிழா துவங்கியது. தினமும் யாகசாலை பூஜைகள் நடந்து நேற்று முன்தினம் காலை கும்ப திருமஞ்சனம் நடந்தது.

பின்னர் அதிகாலை 1:30 மணிக்கு கள்ளழகர் கோடாரி கொண்ட இட்டு, நெல்மணி தோரணங்கள் சூடி, ஈட்டி, வளரி, கத்தி, வால், கேடயம், தடி ஏந்தி அலங்காரமாகினார். அப்போது பச்சை பட்டுடுத்தி தாமிர பாத்திரத்தில் பால் சோறு சாப்பிட்டபடி பூ பல்லக்கில் அமர்ந்தார். கோயிலை விட்டு வெளியேறிய பெருமாள் காவல் தெய்வம் கருப்பண்ணசுவாமியிடம் விடை பெற்றார்.

சீர்பாதம் தாங்கிகள் தோலில் பல்லக்கை சுமந்தபடி அதிகாலை 3:20 மணிக்கு பெருமாள் வைகை ஆற்றில் பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் இறங்கினார். பின்னர் வைகை ஆறு ஆற்றுப்பாலம், ஓட்டப்பாலம் வழியாக தல்லாகுளம் நாகப்பையர் மண்டகப்படியை அடைந்தார்.

மாவட்ட எஸ்.பி., சந்திஷ், பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் உள்ளிட்ட தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலையில் கள்ளழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகினர். அப்போது பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து அழகரை வரவேற்றனர். அங்கிருந்து காட்டு பரமக்குடி, மஞ்சள் பட்டணம் மண்டகப் பணிகளில் எழுந்தருளி மதியம் ஆயிரம் பொன் சப்பரத்தை அடைந்தார். தொடர்ந்து சப்பரத்தில் அமர்ந்த பெருமாளை பக்தர்கள் வைகை ஆற்றில் இழுத்து சென்றனர்.

பரமக்குடியின் முக்கிய வீதிகளில் மண்டகப் படிகளில் எழுந்தருளி, இரவு காக்கா தோப்பு என்னும் வண்டியூர் பெருமாள் கோயிலை அடைந்தார். இன்று(மே 13) மண்டூக மகரிஷி சாப விமோசனம், தசாவதார சேவை நடக்கிறது.

சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி ரெங்காச்சாரி, டிரசரர் நீலகண்டன், மற்றும் டிரஸ்டிகள் ரமேஷ் பாபு, கிரிதரன், கோவிந்தன் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement