விருதை தடுப்பணை பணியில் புதிய யுக்தி... அறிமுகம்; ரூ.25.20 கோடியில் நீரை சேமிக்க மாற்று வழி

விருத்தாசலம்:: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் ரூ. 25.20 கோடி ரூபாயில் தடுப்பணை பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கோமுகி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் ஓடைநீர், கிராம விளை நிலங்களில் இருந்து வழிந்தோடி வரும் மழைநீர் இணைந்து, மணிமுக்தாறு வழியாக, விருத்தாசலம் அடுத்த மேமாத்துார் அணைக்கட்டு வந்தடையும்.
அங்கிருந்து பாசன வாய்க்கால் வழியாக கொடுக்கூர் பெரிய ஏரி, சித்தேரி, சின்னக்குட்டி உடையார், பெரம்பலுார், பரவளூர், தொரவளூர், சாத்துக்கூடல், கோமங்கலம் உட்பட 15 கிராம ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு கிடைக்கிறது.
இதன் மூலம் 5,000 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. உபரி நீர் மணிமுக்தாறு வழியாக வழிந்தோடி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு வழியாக கடலில் கலந்து வீணாகிறது.
இதை தடுக்கும் வகையில் பரவளூரில் கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 12 கோடி ரூபாயில் தடுப்பணை கட்டப்பட்டது. இருப்பினும் மணவாளநல்லுார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நீர்மட்டம் வெகுவாக சரிந்து, போர்வெல் பாசனம் செயலிழந்தது.
எம்.எல்.ஏ., முயற்சிக்கு பலன்
இதையடுத்து, மணவாளநல்லுாரில் தடுப்பணை கட்டி, மழைநீரை சேமிக்க வேண்டுமென, மணிமுக்தா நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில் மணவாளநல்லுாரில் தடுப்பணை கட்ட வேண்டுமெனவும் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார். இதையேற்று, 25.20 கோடி ரூபாயில் தடுப்பணை கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
80 சதவீத பணிகள் நிறைவு
ரூ.25.20 கோடி நபார்டு வங்கி நிதியில், கடந்த ஜனவரி 20ம் தேதி, தடுப்பணை கட்டுமான பணிகள் துவங்கியது. 223 மீட்டர் நீளம், 125 மீட்டர் உயர தடுப்பணையில், 134 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும். இதன் மூலம் மணவாளநல்லுார், எருமனுார், கோமங்கலம், ராசாபாளையம் மற்றும் மணலுார், நாச்சியார்பேட்டை (விருத்தாசலம் நகரம்) பகுதிகளை உள்ளடக்கிய பொது மக்கள் மற்றும் விவசாயிகள், 222 ஆழ்குழாய் கிணறுகள் பயனடையும். 2,894 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறும் வசதி பெறுகிறது.
எஞ்சிய 20 சதவீத பணி
இறுதிக்கட்டமாக கரையின் இருபுறமும் சிமென்ட் கற்கள் பதிக்கப்பட உள்ளன. இதற்காக ஆற்றங்கரையில் தயார் நிலையில் உள்ள சிமென்ட் கற்களை இருபுறம் கரைகளிலும் பதித்து, மண் அரிப்பு பாதிப்பின்றி சரிசெய்யும் பணிகள் நடக்க உள்ளன.
மேலும், தடுப்பணையின் 223 மீட்டர் நீளமும் பாறை கற்கள் பதிக்கப்பட உள்ளன. இது வெள்ள நீரின் வேகத்தை குறைத்து, சீரான வகையில் வழிந்தோட வழிவகுக்கும்.
நீர்மட்டம் உயர புது யுக்தி 12 போர்வெல் அமைப்பு
நிலத்தடி நீர் குறையாத வகையில், நீர்வளத்துறை புதிய யுக்தியை கையாளுகிறது. அதன்படி, தண்ணீர் தேங்கி நிற்கும் தடுப்பணையில் மேற்பகுதியில் போர்வெல் மூலம் குழாய்கள் பதித்து பைப்புகள் இறக்கப்படும்.
இதன் மூலம் பூமிக்கே மீண்டும் நீரை திருப்பி அனுப்பி, நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கப்படும். இம்முயற்சி, கோடை காலத்திலும் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் இதுவரை தடுப்பணை கட்டுமான பணியில் இம்முறை கையாளப்படவில்லை. விருத்தாசலம் மணிமுக்தாற்றில் முதன்முறையாக இப்பணியை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் தீர்வு கண்டுள்ளனர்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் எத்திராஜலு, உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். விருத்தாசலம் மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்டும் பணி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், நவீன முறையில் நீர்மட்டத்தை சேமிக்கும் வழிமுறைகளும் கையாளப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும்
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்