எம்.சாண்ட் விலையை குறைக்க கோரி  இன்ஜினியர்கள் கலெக்டரிடம் மனு 

சிவகங்கை : கல் குவாரிகளில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்களின் விலையை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் இன்ஜி., அசோசியேஷன் நிர்வாகிகள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.

மாவட்டத்தில் கிரஷர்களில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள்விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. அவற்றை பழைய விலைக்கே வழங்க வேண்டும். கல் குவாரிகளை அரசுடைமை ஆக்கினால் அரசுக்கு பல ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும்.

ஆற்று மணல் குவாரிகளை அரசு திறக்க வேண்டும். சிமிண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் அரசு சேர்க்க வேண்டும். கட்டட அனுமதிக்கான கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும்.

எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள் உள்ளிட்ட பொருட்களை ஒரு யூனிட்டிற்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்த்தியுள்ளனர். அரசு, யூனிட்டிற்கு ரூ.1000 வரை குறைக்கவேண்டும்என உத்தரவிட்டும், குவாரிகளுக்கு அதற்கான உத்தரவு வரவில்லை என குறைக்க மறுக்கின்றனர். இதனால் அரசின் கனவு இல்லம் திட்டம் உட்பட கட்டுமான பணிகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன.

எனவே குவாரி பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தும் விதமாக சிவில் இன்ஜி., அசோசியேஷன் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ராகவன், மண்டல தலைவர் பாண்டி, செயலாளர் அபுதாகிர், முன்னாள் மண்டல தலைவர் பாரதிதாசன் உள்ளிட்டோர் நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.

Advertisement