'மிஸ் கூவாகம்' கள்ளக்குறிச்சியில் நடத்த எதிர்பார்ப்பு

மாவட்டத்தின் அடையாளமாக உள்ள உலக பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் ஒரு அங்கமான 'மிஸ் கூவாகம்' அழகி போட்டியை அடுத்த ஆண்டிலிருந்து கள்ளக்குறிச்சியில் நடத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். குறிப்பாக திருநங்கைகளின் பிரத்யேக திருவிழாவாக இது கொண்டாடப்படுவதால் சிறப்பு பெற்றுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் திருநங்கைகள் இவ்விழாவில் பங்கேற்க வருகை தருகின்றனர். மகாபாரத கதையில் வரும் ஐதீக முறைப்படி கூத்தாண்டவராகிய அரவானை தனது கணவனாக நினைத்து கோவில் அர்ச்சகர் கையால் திருநங்கைகள் அனைவரும் தாலி கட்டிக் கொள்வார்கள்.

அடுத்தநாள் அரவாண் சிற்பம் தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொலை களம் கொண்டு செல்லப்பட்டு பலி செய்யப்பட்டதும் திருநங்கைகள் அழுது ஒப்பாரி வைப்பார்கள்.

இதற்கு முன்னதாக 'மிஸ் கூவாகம்' எனும் அரவாணிகள் மட்டுமே பங்கேற்கும் அழகி போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 'மிஸ் கூவாகம்' பட்டம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்தபோது 'மிஸ் கூவாகம்' போட்டிகள் விழுப்புரத்தில் துவங்கப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப்பட்டது. இதையடுத்து கூவாகம் கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைக்குள் வந்துள்ளது. மாவட்டம் பிரிக்கப்பட்ட பின் 'மிஸ் கூவாகம்' போட்டியை கள்ளக்குறிச்சியில் நடத்தி இருக்க வேண்டும்.

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இப்போட்டியை கள்ளக்குறிச்சியில் நடத்த. போதிய ஸ்பான்சர் கிடைக்கவில்லை என கூறப்பட்டாலும் சில அரசியல் உள்நோக்கம் காரணமாக இப்போட்டி இன்று வரை விழுப்புரத்திலேயே நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கூவாகம் என்ற பெயரை வைத்து நடத்தப்படும் அழகிப் போட்டி கள்ளக்குறிச்சியில்தான் நடத்த வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். உலக பிரசித்தி கூத்தாண்டவர் கோவில் திருவிழா கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அடையாளமாக உள்ளது. இதன் ஒரு அங்கமாக நடைபெறும் 'மிஸ் கூவாகம்' போட்டியை அடுத்த ஆண்டிலிருந்து கள்ளக்குறிச்சியில் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்க்கிறனர்.

Advertisement