போதைப்பொருள் விற்பனை நைஜீரியருக்கு '15 ஆண்டு'

பெங்களூரு : போதைப்பொருள் விற்கும்போது, போலீசாரிடம் சிக்கிய, நைஜீரிய நபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து, என்.டி.பி.எஸ்., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

பெங்களூரு, கே.ஆர்.புரத்தின் சந்திரா லே - அவுட்டின், கல்கரே பிரதான சாலையில், 2022ல் போதைப் பொருள் விற்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார், அந்த இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

பொது மக்களுக்கு போதைப்பொருள் விற்க முயற்சித்த, நைஜீரியாவை சேர்ந்த ஹார்லி ஒகநோவா, 45, என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்த 200 கிராம் எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், தொழில் விசாவில் இந்தியாவுக்கு வந்த இவர், பெங்களூரு, கே.ஆர்.புரத்தின், அய்யப்ப நகரில் வசிக்கிறார். எளிதில் அதிகமான பணம் சம்பாதிக்கும் நோக்கில், இரு சக்கர வாகனத்தில் சென்று போதைப்பொருள் விற்றதை ஒப்புக்கொண்டார்.

விசாரணை முடித்த போலீசார், பெங்களூரின் என்.டி.பி.எஸ்., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் ஹார்லி ஒகநோவாவின் குற்றம் உறுதியானதால், இவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, 1.75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி விஜய் தேவராஜ் அர்ஸ் நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement