சென்னை - புருனே நேரடி விமான சேவை போதிய பயணியர் வராததால் நிறுத்தப்படும் நிலை

சென்னை - புருனே இடையேயான விமான சேவை, எந்த முன்னேற்றமும் இல்லாமல் இயங்கி வருகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான புருனேக்கு, கடந்தாண்டு செப்டம்பரில், பிரதமர் மோடி முதல் முறை அரசு பயணமாக சென்றார். அந்நாட்டு மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியாவை சந்தித்து, விமான போக்குவரத்து விரிவாக்கம் குறித்து பேசினார்.
இந்தியா - புருனே விமான சேவையை, அந்நாட்டு விமான நிறுவனமான ராயல் புருனே ஏர்லைன்ஸ், ஏற்கனவே மேற்கு வங்கம் மாநிலம் கோல்கட்டாவில் இருந்து, 2004ம் ஆண்டு காலகட்டத்தில் நடத்தி வந்தது. அதன்பின், பல்வேறு காரணங்களுக்காக, இந்த சேவை நிறுத்தப்பட்டு விட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி, புருனே சென்று திரும்பியதும், மீண்டும் இந்தியாவில் இருந்து விமானங்களை இயக்க, ராயல் புருனே எர்லைன்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. நாட்டில் அதிக பயணியர் வந்து செல்லும் டில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களை ஓரங்கட்டி விட்டு, சென்னையில் இருந்து புருனே தலைநகர் பந்தர் செரி பெகாவன் நகருக்கு, கடந்தாண்டு நவம்பரில் சேவை துவங்கியது.
பயணியர் பலரும் எதிர்பார்க்கப்பட்ட இந்த சேவை, ஆறு மாதங்கள் கடந்தும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு முன்னேறவில்லை என, விமான போக்குவரத்து வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, விமான போக்குவரத்து வல்லுநர்கள் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து புருனேவுக்கு நேரடியாக செல்ல சென்னையில் இருந்து மட்டுமே விமான சேவை உள்ளது. புருனேவில் உள்ள இந்தியர்களில் பலர் தமிழர்கள். அதிலும் திருச்சி, அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள்.
தற்போது, சென்னையில் இருந்து இயக்கப்படுவதால் ஹாங்காங், ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளையும் எளிதில் இணைக்க முடிகிறது. சேவை துவங்கிய போது, மக்களிடையே இருந்த ஆர்வம் படிப்படியாக குறைய துவங்கி உள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் இந்த விமானத்தில், மொத்தம் உள்ள இருக்கைகளில், 50 சதவீதம் மட்டுமே நிரம்புகின்றன.
இதற்கு விமான ஏஜன்ட்களும், விமான நிறுவனமும் பெரிதாக விளம்பரப்படுத்தாததே முக்கிய காரணம். இந்நிலை நீடித்தால், மீண்டும் இந்த விமான சேவை நிறுத்தப்படலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மத்திய சுற்றுலா துறையுடன் இணைந்து, சென்னையில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு, புதிய சேவைகள் துவங்கினால், பயணியருக்கு அது குறித்து தெளிவாக தெரியப்படுத்துகிறோம். அவர்கள் விரும்பும் சேவைகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம்.
புருனே நாட்டிற்கு சேவை துவங்கியதில் இருந்து, அதை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி எடுக்கிறோம். புருனே செல்ல, 'விசா' வழங்குவதில் காலதாமதம் இல்லாமல் இருந்தால், இன்னும் பலர் ஆர்வமாக செல்வர்.
- தேவகி தியாகராஜன்,
தென் மண்டல தலைவர்,
இந்திய பயண முகவர்கள் சங்கம்.
- நமது நிருபர் -
மேலும்
-
9ம் வகுப்பு மாணவன் குத்தி கொலை: சிறுவன் கொடூரம்
-
பல லட்சம் கோடி முதலீடு திரட்ட அமெரிக்க அதிபர் சவுதியில் முகாம்
-
ஆதம்பூர் தளம் அழிப்பு என்ற பாக்., பொய் பிரசாரம்... முறியடிப்பு! நேரில் சென்று வீரர்களை சந்தித்து மோடி நிரூபணம்
-
ராணுவ கிடங்கில் குண்டு வெடிப்பு; இந்தோனேஷியாவில் 13 பேர் பலி
-
எந்த பதவியையும் ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி
-
ஆயில் கிடங்கில் தீ: ரூ.30 கோடி எண்ணெய் நாசம்