பாதாள சாக்கடை பணியால் சாலை பஞ்சர் சுதாகர் நகர், கணபதி நகர் மக்கள் அவதி

விழுப்புரம் விழுப்புரம் சுதாகர் நகர், கணபதி நகர் பிரதான சாலையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

விழுப்புரம் கோர்ட் எதிரே துவங்கி சுதாகர் நகர், கணபதி நகர் வழியாக செல்லும் பிரதான சாலை, திருச்சி நெடுஞ்சாலை, கே.கே. சாலையை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது. பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக பகுதிக்கு வரும் வாகனங்கள் அதிகளவில் இந்த சாலை பயன்படுத்துகின்றனர்.

சுதாகர் நகர் பிரதான சிமெண்ட் சாலையில், பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டினர். குழாய்கள் பதிக்கப்பட்ட பின்பு, சாலை தற்காலிகமாக மண் கொட்டி மூடினர். இதனால், சாலையின் பாதியளவு மண் மேடாக உள்ளது.

பாதி சாலையில் குவிந்து கிடக்கும் சிமெண்ட் கற்கள், பள்ளங்களால், வாகன ஓட்டிகள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். பாதாள சாக்கடை பள்ளத்தில் கார்கள் சிக்கி கொள்வதால், கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லேசான மழை பெய்தாலே, இச்சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. பொது மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் அவதிப்படுகின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையை உடனடியாக சாலையை புதுப்பிக்க வேண்டும். முதற்கட்டமாக சாலை பள்ளங்கள், கற் குவியல்களையும் அகற்றி, சமன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement