விழுப்புரத்தில் 'மிஸ் கூவாகம்' போட்டி நெல்லை ரேணுகாவுக்கு அழகி பட்டம்

விழுப்புரம்,:விழுப்புரத்தில் நடந்த 'மிஸ் கூவாகம் - 2025' அழகி போட்டியில், திருநெல்வேலியைச் சேர்ந்தவர் முதலிடம் பிடித்து அழகி பட்டம் வென்றார்.

விழுப்புரத்தில், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவையொட்டி, தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு, தமிழக அரசு சமூக நலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மிஸ் கூவாகம் - 2025 அழகிபோட்டி நேற்று நடந்தது.

விழுப்புரம் ஆஞ்சநேயா மண்டபத்தில் போட்டி நடந்தது. தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பின் செயலர் கங்கா நாயக் வரவேற்றார். முதல் சுற்றில், 25 திருநங்கைகள் பங்கேற்றனர். அதில், அவர்களது நடை, உடை, பாவனை அடிப்படையில், 15 பேர் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

விழுப்புரம் நகராட்சி திடலில் இரவு 7:00 மணிக்கு, மிஸ் கூவாகம் தேர்வுக்கான இறுதிச்சுற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் அருணா வரவேற்றார். தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பின் தலைவர் மோகனாம்பாள் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு நிர்வாகிகள் விமலா, குயிலி, சுபிக் ஷா, நுாரி, கங்கா, சோனியா, ஷர்மிளா முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக சினிமா நடிகர்கள் தேவிப்பிரியா, வனிதா விஜயகுமார், சஞ்சனாசிங், கோவை பாபு பங்கேற்றனர்.

தொடர்ந்து, திருநங்கையரின் கலை நிகழ்ச்சிகள், நடனம், தனித்திறன் நிகழ்வுகள் நடந்தன. நிறைவாக இரவு 10:30 மணிக்கு நடந்த இறுதிச்சுற்றில் பங்கேற்ற திருநங்கைகளிடம், கல்வி, பாலினம், சமூக விழிப்புணர்வு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, இறுதிச்சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், திருநெல்வேலியை சேர்ந்த ரேணுகா, மிஸ் கூவாகம் - 2025 அழகி பட்டத்தை வென்றார். இரண்டாவது இடத்தை கள்ளக்குறிச்சி அஞ்சனாவும், மூன்றாவது இடத்தை கோவை ஆஸ்திகாவும் பிடித்தனர். தொடர்ந்து, அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் கிரீடம் சூட்டி, ரொக்கப் பரிசு வழங்கினர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், புதுச்சேரி, சேலம், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் திருநங்கையர் பலர் பங்கேற்றனர்.

Advertisement