10ம் வகுப்பு தேர்வில் 88.66 சதவீதம் தேர்ச்சி; மாநிலத்தில் 42 அரசு பள்ளிகள் 'ஆல் பாஸ்'

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 9,798 மாணவ, மாணவிகளில் 8,687 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.66 ஆகும்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 9,798 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இத்தேர்வின் முடிவு நேற்று வெளியானது. அதில், 8,687 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தின் மொத்த தேர்ச்சி 88.66 சதவீதம் ஆகும்.புதுச்சேரி பிராந்தியத்தில் தேர்வு எழுதிய 7,099 மாணவ, மாணவிகளில் 6,169 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி சதவீதம் சதவீதம் 86.9; காரைக்கால் பிராந்தியத்தில் தேர்வு எழுதிய 1,916 மாணவ, மாணவிகளில் 1,737 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.66

மாகி பிராந்தியத்தில் தேர்வு எழுதிய 433 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று, பிராந்தியத்திற்கு நுாறு சதவீத தேர்ச்சி பெருமையை பெற்றுத் தந்துள்ளனர். ஏனாமில், தேர்வு எழுதிய 350 மாணவ, மாணவிகளில் 348 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.43 ஆகும்.

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுச்சேரி பிராந்தியத்தில் 25, மாகி, ஏனாமில் தலா 6 மற்றும் காரைக்காலில் 5 என மொத்தம் 42 அரசு பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளன.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் மாநிலத்தில் 99.22 தேர்ச்சி பெற்றுள்ன. அதில், காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில், தேர்வு எழுதிய 372 பேரில் 367 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 98.66 ஆகும்.

Advertisement