உணவுக்கழிவில் இருந்து மக்கும் 'பயோ பிளாஸ்டிக்'; நம்பிக்கை தருகிறார் விஞ்ஞானி அசோக்குமார்

ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் தொழில் நகரம் திருப்பூர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்வாசிகள் என, பல லட்சம் பேர் வசிக்கும் 'பிஸி'யான நகரம். இருப்பினும், திருப்பூர் நகரப்பகுதிகளில் சுத்தம், சுகாதாரம் பேணி காப்பதில் பெரும் தடுமாற்றம் தென்படுகிறது.
உள்ளாட்சி நிர்வாகத்தினரால் தினசரி சேகரிக்கப்படும் குப்பை, பாலிதின் உள்ளிட்ட திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதென்பது, பெரும் சவாலானதாகவே உள்ளது. திடக்கழிவு மேலாண்மை பணியை அறிவியல் ரீதியாக அணுகும் வல்லுனர்கள் பலர், பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும் வருகின்றனர்.
அவ்வகையில், உயிரி தொழில்நுட்ப துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை வெளியிட்ட உலகின் முன்னணி விஞ்ஞானிகளின் பெயர் பட்டியலில் இடம் பெற்ற தமிழக விஞ்ஞானி டாக்டர். அசோக்குமார் கூறியதாவது:
தற்போதைய சூழலில், சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை என்பது மாறியுள்ளது. மத்திய அரசு, திடக்கழிவு மேலாண்மையை எப்படி கையாள்வது என்பதில் பல்வேறு ஆராய்ச்சிகளை ஊக்குவித்து வருகிறது.
உணவுக்கழிவில் இருந்து வெளியேறும் 'பாலிமர்' என்ற பொருளை 'பயோ பிளாஸ்டிக்'காக மாற்றும் தொழில்நுட்பத்தின் வாயிலாக, அந்த வகை பிளாஸ்டிக் எளிதில் மட்கும். 'பயோ பிளாஸ்டிக்' வாயிலாக தயாரிக்கப்படும் டம்ளர், தட்டு ஆகியவற்றை பயன்படுத்தினாலும் உடலுக்கு கேடு ஏற்படாது; அது, மண்ணில் மட்கும் தன்மை கொண்டது.
உருமாற்ற முடியும்
அதேபோல், வீடு, ஓட்டல், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து, அந்த நீரில் 'மைக்கேரா ஆல்கே' என்ற நுண்பாசியை வளர்ப்பதன் வாயிலாக, கழிவுநீருக்குள் இருக்கும் தேவையற்ற வேதிப்பொருளை அது அழித்து விடும்; இதனால், கழிவுநீர் சுத்தமாகிவிடும். அந்த நுண்ணுயிர் அந்த நீரில் அடர்ந்து வளரும்; அந்த நுண்ணுயிரை மட்டும் தனியாக எடுத்து, 'பயோ பிளாஸ்டி'க்காக உருமாற்ற முடியும்.
திருப்பூர், கோவை, ஈரோடு போன்ற தொழில் நகரங்களில், பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர், தங்கள் பகுதியில், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தை இதுபோன்ற தொழில்நுட்ப முறையில் செயல்படுத்தும் போது, மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
தேவையான வழிகாட்டுதல், நிதி ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில், திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். உணவுக்கழிவில் இருந்து 'பயோ காஸ்' உற்பத்தி செய்ய முடியும். எனவே, வீணாகும் உணவுக் கழிவுகளை வளம் நிறைந்த பொருளாக மாற்றுவதுடன், வருமானமும் பெற முடியும்; மண் வளத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள பிளாஸ்டிக்கிற்கு மாற்றும் உருவாக்க முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்
'பேப்பர் கப்' ஜாக்கிரதை!
''பலரும் தினசரி டீ, காபி ஆகியவற்றை பேப்பர் கப்பில் அருந்துகின்றனர். பெரும்பாலும், 90 டிகிரி கொதி நிலையில் வழங்கப்படும் டீ, காபியுடன், 5 நிமிடம் அந்த பேப்பர் கப் வைத்திருந்தாலே, அதில் கலந்துள்ள, 20 முதல், 25 ஆயிரம் பிளாஸ்டிக் நுண்துகள்கள், நம் உடலுக்குள் செல்கிறது. இது, உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. இதுபோன்ற பிளாஸ்டிக் கலப்பு நிறைந்த டம்ளர், தட்டு உள்ளிட்டவற்றுக்கு மாற்று மூலப்பொருளாக 'பயோ பிளாஸ்டிக்' பயன்படுத்த முடியும்'' என்கிறார் டாக்டர் அசோக்குமார்.
மேலும்
-
பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா 'சுளீர்'
-
ஜம்மு காஷ்மீரில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று திடீர் விடுமுறை; கல்வித்துறை அறிவிப்பு
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் கவாய்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 சரிவு; ஒரு சவரன் ரூ.70,440!
-
பொள்ளாச்சி வழக்கில் நான் சொன்னது நடந்திருக்கிறது: தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு
-
காலிமனை வாங்கும் போது அதன் அளவுகள் விஷயத்தில் ஏமாறாமல் இருக்க என்ன செய்வது?