அரசு கட்டடங்களுக்கு நிலுவை வரி வசூலிக்க நினைவூட்டு கடிதம் அனுப்புகிறது மாநகராட்சி

கோவை : கோவை மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் உள்ள அரசு கட்டடங்களுக்கு, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நினைவூட்டல் கடிதம் அனுப்பி வருகிறார்.

கோவை மாநகராட்சி பகுதியில், 5 லட்சத்து, 89 ஆயிரத்து, 896 வரி விதிப்பு கட்டடங்கள் இருக்கின்றன. அதில், மத்திய - மாநில அரசுகளுக்கு சொந்தமான, 9,130 வரி விதிப்பு கட்டடங்கள் உள்ளன. மற்ற கட்டடங்களுக்கு வரி வசூலிப்பது போல், அரசு கட்டடங்களுக்கும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை வீதம் வசூலிக்கப்படும்.

நடப்பு நிதியாண்டுக்கு (2025-26), 18.48 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் (2024-25) ரூ.11.08 கோடி வசூலிக்கப்படாமல் நிலுவை இருந்தது. எந்தெந்த அரசு கட்டடங்களுக்கு வரி செலுத்தப்படவில்லை என, வருவாய் பிரிவினருடன் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.

சில அரசு துறை அலுவலகங்களில், பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு இருப்பதும், புதிய கட்டடங்களுக்கு வரி செலுத்தி வருவதும், பழைய கட்டடங்களுக்கு வரி தொடர்ந்து விதிக்கப்பட்டு வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து, வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருக்கும் அரசு கட்டடங்கள் மற்றும் நடப்பு நிதியாண்டுக்கு வரி செலுத்த வேண்டிய கட்டடங்களுக்கு மாநகராட்சி கமிஷனர், நினைவூட்டல் கடிதம் அனுப்பி வருகிறார்.

அதில், நிலுவை வரியையும், நடப்பு நிதியாண்டுக்கான வரியையும் செலுத்த வேண்டும்; வரி விதிப்பு தொடர்பான முறையீடுகள், கோரிக்கைகள் இருப்பின், டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயல்படும் வருவாய் பிரிவை, நேரில் அணுக அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சொத்து வரி போல், அரசு கட்டடங்களுக்கு சேவை வரி விதிக்கப்படுகிறது. அவ்வரியினங்கள் வசூலிக்கப்படாமல் நிலுவையாகிறது என்பதால், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

சில துறைகளில் கட்டடங்கள் இடிக்கப்பட்டு இருக்கின்றன; சில இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து, நிதி ஒதுக்கீடு பெற்று, வரித்தொகை செலுத்த வேண்டிய நிலையில், சில துறைகள் இருக்கின்றன. நிதியாண்டு முடிவதற்குள் அத்தொகையை வசூலிக்க, இப்போதிருந்து முயற்சிகளை துவக்கியுள்ளோம்' என்றனர்.

நிலுவை வழக்குகள்

மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்துவது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால், 152 வரி விதிப்புகளுக்கு வசூலிக்கப்படாமல் இருக்கிறது. இவ்வகையில், 20.54 கோடி ரூபாய் நிலுவையாக இருக்கிறது. நடப்பு நிதியாண்டில் (2025-26) 6.31 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியிருக்கிறது. வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி, இக்கட்டடங்களுக்கான சொத்து வரியை வசூலிக்க, மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும்.

Advertisement