மாவட்டத்தில் ஜமாபந்தி; 20ம் தேதி முதல் துவக்கம் 

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாக்களிலும், ஜமாபந்தி வரும் 20ம் தேதி துவங்குகிறது.

வருவாய்த்துறையின், நிதியாண்டில் நடந்த பணிகளை தணிக்கை செய்யும், ஜமாபந்தி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் துணை கலெக்டர்கள், ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு தாலுகாவிலும் முகாம் நடத்துகின்றனர்.

அதன்படி, 1434ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி, வம் 20ம் தேதி துவங்குகிறது. தாராபுரம் தாலுகாவில் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு தாலுகாவில், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், ஜமாபந்தி நடத்த உள்ளனர்.

திருப்பூர் ஆர்.டி.ஓ., அவிநாசிக்கும், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கும், மாவட்ட வழங்கல் அலுவலர் ஊத்துக்குளிக்கும், கலால் உதவி கமிஷனர் பல்லடத்துக்கும் ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தாலுகா அளவில் உள்ள, ஒரு உள்வட்டத்துக்கு (பிர்கா) ஒருநாள் என்ற அடிப்படையில், ஜமாபந்தி நடக்க உள்ளது. வரும், 20ம் தேதி துவங்கி, சனி, ஞாயிறு, திங்கட்கிழமை மற்றும் 21ம் தேதி நீங்கலாக, ஜமாபந்தி நடக்க உள்ளது.

பொதுமக்கள், இவ்வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்து தீர்வு பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement