மாநகராட்சி மூலம் நேரடி சம்பளம்

திருப்பூர்; தற்காலிக துாய்மை பணியாளர், டிரைவர்களுக்கு, மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக சம்பளம் வழங்க வேண்டுமென, மாநகராட்சி பணியாளர் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியின், 40வது வார்டுகளில் பணியாற்றும் டிரைவர்கள், 15 ஆண்டுகளுக்கு மேலாகியும், நிரந்தர சம்பளம் இல்லை; மாநகராட்சி நிர்வாகம் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம், சரியாக கூலி வழங்குவதில்லை.

ஒப்பந்த துாய்மை பணியாளர் மற்றும் டிரைவர்களுக்கு மாத சம்பளம் சரியான தேதியில் வழங்கு வதில்லை. குடும்ப செலவுகளை செய்வது சிரமமாக இருக்கிறது; மாதம் தோறும், 5ம் தேதி சம்பளம் வழங்க பரிந்துரைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி அம்பேத்கர் துாய்மை பணியாளர் மற்றும் ஒப்பந்த டிரைவர்கள் தொழிற்சங்கத்தினர், கலெக்டரிடம் அளித்துள்ள மனு:

ஒப்பந்த நிறுவனம், துாய்மை பணியாளருக்கான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில்லை. தற்காலிக துாய்மை பணியாளராக, 2000 பேர் பணியாற்றுகிறோம். பிடித்தம் செய்யப்படும் இ.எஸ்.ஐ., - பி.எப்., சந்தாவுக்கான ரசீது வழங்கப்பட வேண்டும்.துாய்மை பணிக்கான வாகனங்கள் பழுதாகி ஓரம்கட்டப்பட்டுள்ளன; பழுதுநீக்கி, மீண்டும் பயன் பாட்டுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்த நிறுவனத்துக்கு பதிலாக, மாநகராட்சி நிர்வாகமே 60 வார்டுகளிலும் துாய்மை பணியை நேரடியாக மேற்கொண்டால், பலகோடி ரூபாய் செலவு குறையும்.

மாநகராட்சி நிர்வாகமே, அனைத்து வாகனங்களையும் பராமரிக்க ஆட்களை நியமிக்க வேண்டும். சரியாக குப்பை சேகரிக்காமலும், துாய்மை பணி மேற்கொள்ளாமலும், 60 வார்டுகளிலும், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு கெட்டபெயர் ஏற்படுகிறது. தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்ய, மாநகராட்சி நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement