திருச்செந்துார் கோவிலில் சுகாதாரமில்லை; முருக பக்தர்கள் பேரவை குற்றச்சாட்டு

பல்லடம்; திருச்செந்துார் கோவிலில் சுகாதாரம் பூஜ்ஜியம் என, முருக பக்தர்கள் பேரவை குற்றம்சாட்டி உள்ளது.

தமிழ்நாடு முருக பக்தர்கள் பேரவையின் மாநில தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக உள்ள திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கோவிலில், போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கிடையாது. சுகாதாரம் பூஜ்ஜியமாக உள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்க தேவஸ்தானம் சார்பில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களிலும், ஆன்லைன் முறையில் விடுதிகள் புக்கிங் செய்யப்படும் நிலையில், இங்கு மட்டும் ஆன்லைன் முறை இல்லாததால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு அவசர வழி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை.

இதனால், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கோவில் வளாகத்தில் உள்ள நாழிக் கிணறு நாற்றம் வீசும் கிணறாக பராமரிப்பின்றி உள்ளது. வாகன பார்க்கிங் பகுதி, பள்ளத்தாக்கு போல் கரடு முரடாக உள்ளது. இவ்வாறு, கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு, எந்தவித அடிப்படை வசதிகளும் கிடையாது. முந்தைய காலங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த போதும், எந்தவித இடையூறும் இன்றி சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.

தற்போது, கோவிலில், பணமே பிரதானமாக உள்ளது. இதர கோவில்களைப் போன்று, திருச்செந்துார் கோவிலில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் இருந்து திருச்செந்துார் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுக்கும் நிலையில், அனைவரும் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement