சூறாவளி காற்றுடன் கன மழை

எருமப்பட்டி :நாமக்கல் மாவட்டத்தில், நேற்று பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. சேந்தமங்கலம் பகுதியில், மாலை, 5:00 மணி முதல் சூறாவளி காற்று வீச தொடங்கியது. அதை தொடர்ந்து கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையால், சேந்தமங்கலம் டவுன் பஞ்., மணிக்கூண்டு சாலையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்றவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும், காந்திபுரத்தில் இருந்து காரவள்ளி செல்லும் சாலையில் வீசிய சூறாவளி காற்றால், சா‍லையோரம் இருந்த தென்னை மரங்களின் மட்டைகள் சாலையில் விழுந்து கிடந்தன. இதனால், அந்த வழியாக சென்றவர்கள் பயத்துடன் செல்லும் நிலை ஏற்ப்பட்டது. இதேபோல், எருமப்பட்டி, புதுச்சத்திரம் பகுதிகளில் கடும் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது.
* நாமக்கல் நகரில், நேற்று மாலை, 5:10 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் துவங்கிய மழை, ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. பள்ளமான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

Advertisement