வனப்பகுதியில் 'ட்ரோன்' இயக்க தடை;  அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

பொள்ளாச்சி; தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், 'ட்ரோன்'களின் இயக்கத்துக்கு தடை உள்ள நிலைகளில், கோடை விடுமுறையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள், பேரணி, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில், போட்டோ, வீடியோ எடுக்க, 'ட்ரோன்' பயன்படுத்தப்படுகிறது. இதனை இயக்குவோர், முறைப்படி போலீசார் உள்ளிட்ட அரசு துறைகளிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், சிலர், 'ரீல்ஸ்' மோகத்தில், 'ட்ரோன்'களை பறக்க விட்டு, 'வீடியோ' எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்களில், தங்கும் விடுதி, நீர் வீழ்ச்சி, மலைப்பாதை உள்ளிட்டவைகளை 'ட்ரோன்' வாயிலாக வீடியோ எடுக்கின்றனர். இதற்கு கடிவாளம் போடும் வகையில், தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில், 'ட்ரோன்' இயக்கத்திற்கு, வனத்துறையினர் முழுமையாக தடை விதித்துள்ளனர்.

தற்போது, கோடை விடுமுறை என்பதால், ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை, ஏற்காடு, ஆனைமலை, சத்தியமங்கலம், களக்காடு, முண்டந்தொரை, முதுமலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் 'ட்ரோன்' இயக்கத்தை கண்டறிந்து தடுக்க, தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து, வனத்துறையினர் கூறியதாவது:

தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில், 'ட்ரோன்' இயக்கத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள அணை, நீர்வீழ்ச்சிகள், மின்உற்பத்தி நிலையங்கள், புலிகள் காப்பகம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், துறை ரீதியான அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துமீறுவோருக்கு அபராதம் விதிப்பு, 'ட்ரோன்' பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு, கூறினர்.

Advertisement