மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்ற தமிழக வாலிபர்கள் 3 பேர் கைது நெட்டப்பாக்கம் போலீசார் அதிரடி

நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற தமிழக வாலிபர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலம், கரியமாணிக்கத்தில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கரியமாணிக்கத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, கரியமாணிக்கம், வேளாண் களம் அருகே பைக்குகளுடன் நின்று, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுக் கொண்டிருந்த மூவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர்கள் திருச்சி, காட்டுர் மகுடபதி மகன் கார்த்திக்ராஜா,32; கரூர், காந்தி கிராமம் ராமலு மகன் சோமேஸ்வரன்,35; கரூர் கிருஷ்ணநாயகபுரம் செல்வம் மகன் சுப்ரமணி, 32; என்பதும், இவர்கள் பிற மாநில தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விளம்பரப்படுத்தி மூன்று இலக்க கேரள லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும், கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு, ரூ.12,700 பணம், ஒரு பைக், ஒரு ஸ்கூட்டர், 4 மொபைல் போன்கள், ரசீது புத்தகம், சிக்கிம் மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement