கர்னல் சோபியா குரேஷியின் மாமனார் வீடு சூறையென வதந்தி

பெலகாவி:ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மாமனார் வீடு ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரால் சூறையாடப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்பரேஷன் சிந்துார் கடந்த 7ம் தேதி நமது ராணுவத்தினரால் நடத்தப்பட்டது.

இதுகுறித்து வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, பெண் தரைப்படை ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்தனர். இரண்டு பெண் அதிகாரிகளும் தேசம் முழுவதும் பிரபலம் அடைந்தனர்.

அதன்பின், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை கண்டித்து, பெலகாவி, கொன்னுாரில் உள்ள ராணுவ கர்னல் சோபியா குரேஷியின் மாமனாரின் வீடு, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினரால் அடித்து நொறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதை அறிந்த மாவட்ட எஸ்.பி., பீமாசங்கர் குலேட், கர்னலின் மாமநார் கவுசாசாப் பகேவாடியின் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.

அப்போது, இது தவறான தகவல் என தெரிந்தது. பாதுகாப்பு காரணத்திற்காக அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பீமாசங்கர் கூறுகையில், “தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. எனவே, மக்கள் இது போன்ற செய்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம்,” என்றார்.

Advertisement