மின்னல் தாக்கி 2 பேர் பலி

முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை, பாக்குவெட்டி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 2 பேர் பலியாகினர்.

முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை சேர்ந்த செந்துாரான் 55. ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு கழகத்தில் சுமை துாக்கும் பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று இடியுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது கிடாத்திருக்கையில் விவசாய நிலத்தில் பருத்தி பறித்து கொண்டிருந்த செந்துாரான் மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இதே போல் கமுதி அருகே பாக்குவெட்டியைச் சேர்ந்த காளிச்சாமி 55. இவர் உப்பங்குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் காளிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு சம்பவங்கள் குறித்து பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement