மலையேற்றப் பயிற்சியில் விபத்து: இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் மலையேற்றத்தின்போது ஏற்பட்ட விபத்தில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் வடக்குப்பகுதியில் கேஸ்கேட்ஸ் மலைத்தொடர் உள்ளது. இங்குள்ள மலைத்தொடரின் மேற்குப் பகுதியான எர்லி விண்டர்ஸ் ஸ்பைர் பகுதியில் கடந்த வாரம் கிரேட்டர் சியாட்டில் உள்ள சோதனை உபகரண உற்பத்தி நிறுவனமான ப்ளுக் கார்ப்பரேஷனில் பொறியியல் துணைத்தலைவராக பணியாற்றி வரும் விஷ்ணு 48, தனது மூன்று நண்பர்களான டிம் நுயென் 63, ஒலெக்சாண்டர் மார்டினென்கோ 36, மற்றும் அன்டன் செலிக் 38, ஆகியோருடன் மலை ஏற முயன்ற போது புயல் காற்று வீசியுள்ளது.
அதை கவனித்து இந்த குழுவினர், பயணத்தை நிறுத்தி, கீழே இறங்க முடிவு செய்து வந்துகொண்டிருந்தனர். அவர்கள் இறங்கும்போது நிலை தவறி 200 அடி கீழே விழுந்து விஷ்ணு, டிம் நுயென் மற்றும் ஒலெக்சாண்டர் மார்டினென்கோ ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

ப்ளுக் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

விஷ்ணு உயிரிழந்தது எங்களது நிறுவனத்திற்கு பேரிழப்பு. அவர் மிகுந்த திறமைவாய்ந்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல். அவருடன் சென்ற அன்டன் செலிக் பலத்த காயமடைந்துள்ளார். மூளையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு அந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement