நாட்டுக்காக பேசுகிறேன்; கட்சிக்காக அல்ல: விமர்சனத்துக்கு சசி தரூர் பதில்

10

திருவனந்தபுரம்: ''நான் நாட்டுக்காகத்தான் பேசுகிறேன். கட்சிக்காக பேசவில்லை,'' என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், ஐ.நா., சபையில் நீண்ட காலம் பணியாற்றியவர். இந்தியா சார்பில் ஐ.நா., பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டவர்.


சர்வதேச அரசியல், வெளியுறவுக்கொள்கை பற்றி நன்கு அறிந்தவர். இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்பாக, அவர் மத்திய அரசின் செயல்பாட்டை ஆதரித்து தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். அவரது பேட்டிகள், சர்வதேச ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
இவ்வாறு அவர், அரசுக்கு ஆதரவாக பேசுவது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவர், கட்சியின் லட்சுமண ரேகையை கடந்து விட்டதாகவும், அவர் பேசுவது கட்சியின் கருத்து அல்ல என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போர்ச்சூழலில் நான் ஒரு இந்தியனாக பேசினேன். மற்றவர்களுக்காக பேசுவது போல, நான் ஒருபோதும் நடித்தது கிடையாது.

நான் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அல்ல; நான் மத்திய அரசு செய்தி தொடர்பாளரும் அல்ல. நான் என்ன சொல்கிறேனோ அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். அல்லது உடன்பாடு இல்லை என்றால், என்னை தனிப்பட்ட முறையில் குறை கூறலாம் பரவாயில்லை.

நான் எனது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகிறேன் என்பதை மிகத் தெளிவாகக் கூறி விட்டேன். சர்வதேச அளவில் மிகவும் முக்கியமான ஒரு நேரத்தில், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்திருக்க வேண்டிய தருணத்தில், நாட்டுக்கான எனது பங்களிப்பு இது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில், நமது எண்ணங்கள், செயல்பாடுகள் பற்றி பலருக்கும் புரிதல் இல்லை. அதனால் தான் நான் பேசுகிறேன்.
என் கருத்தை ஏற்பதும் நிராகரிப்பதும் கேட்பவரின் விருப்பம். இது தொடர்பாக, கட்சியிடம் இருந்து எனக்கு எந்த விதமான தகவலும் இல்லை; ஊடகங்களில் வரும் தகவல்களை மட்டுமே நான் பார்த்தேன்.
இவ்வாறு சசி தரூர் கூறினார்.

Advertisement