கைதானோர் மட்டும் வழுக்கி விழுவது ஏன்: உயர்நீதிமன்றம் கேள்வி

14


சென்னை: வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு கைதானோர் மட்டும் வழுக்கி விழும் நிலையில் போலீஸ் ஸ்டேஷன் கழிவறைகள் உள்ளனவா
என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.


வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு கைகால் முறிவு ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்க உத்தரவிடும்படி அவரது தந்தை இப்ராஹிம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரரின் மகனுக்கு காயம் ஏற்பட்டது எப்படி என கேள்வி எழுப்பினர்.


இதற்கு பதிலளித்த தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும், சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட நீதிபதிகள், போலீஸ் ஸ்டேசன் கழிவறைகளில், குற்றம்சாட்டப்பட்டு கைதானோர் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளதா?
அந்த கழிப்பறையை போலீசார் பயன்படுத்தவில்லையா?
அவர்களுக்கு ஏதும் ஆகவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கட்டுப்போடும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஏதேனும் ஒரு நாள் சம்பந்தப்பட்ட போலீஸ் பணியை இழக்க நேரிடும் எனக்கூறியதுடன், மனுதாரரின் மகனுக்கு சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு விசாரணையை முடித்து வைத்தனர்.

Advertisement