இந்தியா பயப்பட வேண்டாம் * ஆறுதல் தருகிறார் மஞ்ச்ரேக்கர்

புதுடில்லி: ''ரோகித்-கோலி ஓய்வை நினைத்து பயப்பட வேண்டாம். இந்திய அணி மீண்டு வரும்,'' என மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரோகித், கோலி ஓய்வு பெற்றனர். சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினும் ஓய்வு பெற்று விட்டார். இதனால் அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் என்னவாகும் என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 59, கூறியது:
இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் என்று அழைக்கப்பட்ட சச்சின், டிராவிட், லட்சுமண், கங்குலி என நால்வரும் அடுத்தடுத்து டெஸ்ட் அரங்கில் இருந்து விடை பெற்றனர். இதனால் இந்திய அணியின் எதிர்காலம் குறித்து பலரும் வருந்தினர்.
ஆனால், அடுத்த சில ஆண்டில் டெஸ்ட் அரங்கில் இந்தியா, 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது. இதுபோல ரோகித்-கோலி ஓய்வை நினைத்து பயப்பட வேண்டாம். ரசிகர்கள் சிலர் வருத்தப்படலாம். ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் பிரபலம் ஆனது. இங்கு கிரிக்கெட் வலுவாக உள்ளது. இந்திய அணிக்காக விளையாட திறமையான, ஆயிரக்கணக்கான இளம் வீரர்கள், போதுமான அளவுக்கு காத்திருக்கின்றனர்.
இதுபோன்ற இக்கட்டான சூழலை எதிர்கொள்ள வரும் வீரர்கள், திறமையானவர்களாக இருக்க வேண்டும். இதற்கு சற்று கால அவகாசம் தேவைப்படும். இதற்காக பயப்பட வேண்டாம்.
முன்னதாக நான்கு முன்னணி பேட்டர்கள் ஓய்வு பெற்ற போது, நமது பவுலர்கள் எழுச்சி பெற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றுத் தந்தனர். இதுபோல மறுபடியும் புதிய நட்சத்திர பேட்டர்கள், பவுலர்களை நாம் கண்டறியலாம். இந்தியா தொடர்ந்து டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இழப்பதற்கு ஏதுமில்லை
மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,'' அன்னிய மண்ணில் பேட்டிங் மிக முக்கியம். இங்கு தான் நமது பலவீனம் வெளிப்படுகிறது. இதை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். ரோகித், கோலி இருந்த போது தான் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடரில் தோல்வி கிடைத்தது. தற்போது நம்மிடம் இழப்பதற்கு ஏதும் இல்லை. புதிய இந்திய அணிக்கு வாழ்த்துகள்,'' என்றார்.

அதிர்ச்சியாக உள்ளது
மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,'' டெஸ்ட் அணி கேப்டனாக பும்ராவுக்குப் பதில் வேறு ஒருவரை தேடுவது அதிர்ச்சியாக உள்ளது. பும்ராவின் காயங்கள் தான் காரணம் என்றால், துணைக் கேப்டனை கவனமாக தேர்வு செய்யுங்கள்,'' என்றார்.

Advertisement