வர்த்தக துளிகள்

ரூ.24,650 கோடி அன்னிய கடன் திரட்டிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்




முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து 24,650 கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டு ஆசியாவில் 55 நிறுவனங்கள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள, மிகப்பெரிய கடன் குழுமம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்க்கு கடனை வழங்கி உள்ளது. கடந்த 2023ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய நிறுவனம் பெறும் மிகப்பெரிய கடன் இதுவாகும்.



6 ஜி காப்புரிமைக்கு விண்ணப்பம்உலகளவில் இந்தியா முன்னிலை




உலகளவில் 6 ஜி சேவைக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ள முன்னணி ஆறு நாடுகளில், இந்தியாவும் இடம்பெற்று இருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு துறை இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி தெரிவித்து உள்ளார். டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவர், '6 ஜி தொழில்நுட்பம் தொடர்பான 111 ஆராய்ச்சி திட்டங்களுக்கு, 300 கோடி ரூபாயை இந்தியா ஒதுக்கி உள்ளது. 5 ஜியை விட 100 மடங்கு வேகமாக இருக்கும்' என தெரிவித்தார்.


தொழிலாளர்கள் ஊதியம்

ஆண்டுக்கு 6 சதவீதம் வளர்ச்சிபல்வேறு தொழிற்சாலைகள், செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்குவதுடன், திறமையான தொழிலாளர்களை தக்க வைத்துக்கொள்ள விரும்புவதால், தொழிலாளர்களின் ஊதியம், ஆண்டுக்கு 5 -- 6 சதவீதம் வளர்ச்சி கண்டு வருவதாக, டெலாய்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 15 துறைகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும்; இதில், தயாரிப்புத்துறை, வாகனம் உள்ளிட்ட துறைகளில் வலுவான தேவை காரணமாக, பணியமர்த்தல், இந்தாண்டு 10 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement