பட்லர் விலகல்... சிக்கலில் குஜராத் * நாளை பிரிமியர் தொடர் துவக்கம்

புதுடில்லி: இந்தியா, பாகிஸ்தான் போர் பதட்டம் காரணமாக பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அமைதி திரும்பிய நிலையில், நாளை மீண்டும் தொடர் துவங்க உள்ளது.
ஏற்கனவே 57 போட்டி முடிந்த நிலையில் இன்னும் 17 போட்டி நடக்க உள்ளன. இருப்பினும் மே 25ல் முடிய வேண்டிய இத்தொடர், ஜூன் 3 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அணிகளின் முன்னணி வீரர்கள் முழுமையாக பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிக்கலில் குஜராத்
குஜராத் அணி (11 போட்டி, 16 புள்ளி) பேட்டிங்கில் முதுகெலும்பாக திகழ்ந்தவர் பட்லர் (11 போட்டி, 500 ரன்). மீதமுள்ள 3 லீக் போட்டியில் மட்டும் பங்கேற்கும் இவர், பின் இங்கிலாந்து திரும்புகிறார். மே 29ல் சொந்தமண்ணில் துவங்கும் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளார். குஜராத் அணி 'பிளே ஆப்' தகுதி பெறுவது ஏறக்குறைய உறுதி என்ற நிலையில் பட்லர் இல்லாதது இழப்பு. இவருக்குப் பதில் இலங்கையில் குசல் மெண்டிஸ் இணைந்துள்ளார்.
நாடு திரும்பிய மொயீன் அலி (கோல்கட்டா), ஆர்ச்சர் (ராஜஸ்தான்), சாம் கர்ரான், ஓவர்டன் (சென்னை) மறுபடியும் வரப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
யான் சென் 'நோ'
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு (எதிர்-ஆஸி.,) தயாராக வேண்டும் என்பதால், பஞ்சாப் அணியின் யான்சென் லீக் போட்டிக்குப் பின் தென் ஆப்ரிக்கா திரும்புகிறார். தவிர மார்க்ரம் (லக்னோ), ஸ்டப்ஸ் (டில்லி), ரிக்கிள்டன் (மும்பை) உள்ளிட்ட அனைத்து தென் ஆப்ரிக்க வீரர்களுக்கும் மே 27க்குள் நாடு திரும்ப வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஜேக் பிரேசர் மெக்கர்க் (ஆஸி.,) நாடு திரும்பியதால் டில்லி அணி, வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. இவர் தற்போது வங்கதேச அணியுடன் எமிரேட்சில் உள்ளார். இங்கு எமிரேட்ஸ், பாகிஸ்தானுக்கு எதிராக மே 17-30ல் ஐந்து சர்வதேச 'டி-20'ல் பங்கேற்க உள்ளார். இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு, இன்னும் அனுமதி தராதது, டில்லிக்கு சிக்கல் தந்துள்ளது.