இந்திய அணி பயணம் எப்போது

புதுடில்லி: டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினர் ஜூன் முதல் வாரம் இங்கிலாந்து செல்லவுள்ளனர்.
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 20-24ல் லீட்சில் நடக்கும். அடுத்த நான்கு போட்டிகள் பர்மிங்காம் (ஜூலை 2-6), லார்ட்ஸ் (ஜூலை 10-14), மான்செஸ்டர் (ஜூலை 23-27), ஓவலில் (ஜூலை 31-ஆக. 4) நடக்க உள்ளன.
டெஸ்ட் கேப்டன் ரோகித் சர்மா, சீனியர் கோலி ஓய்வு அறிவித்த நிலையில், இந்திய அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட உள்ளார். அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணித்தேர்வும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதனிடையே பயிற்சியாளர் காம்பிர் தலைமையில், இந்திய வீரர்கள், சக பணியாளர்கள் இடம் பெற்ற முதற்கட்ட அணியினர் ஜூன் 6ல் இங்கிலாந்து கிளம்பிச் செல்ல உள்ளனர். அன்னிய மண்ணில் உள்ள மற்ற பயிற்சியாளர்கள் நேரடியாக இங்கிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைந்து கொள்வர்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் வெளியான செய்தியில்,' பிரிமியர் தொடரில் பங்கேற்காத, இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள் காம்பிருடன் இணைந்து, முதலில் இங்கிலாந்து செல்ல உள்ளனர். மீதமுள்ள வீரர்கள், பிரிமியர் தொடருக்குப் பின், கிளம்பிச் செல்வர்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர இந்திய 'ஏ' அணி இங்கிலாந்து சென்று 4 நாள் கொண்ட போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணியும் வரும் வாரம் அறிவிக்கப்பட உள்ளது. இவர்கள் மே 25ல் இங்கிலாந்து செல்லவுள்ளனர். முதல் போட்டி மே 30ல் துவங்குகிறது.
அடுத்து இந்திய சீனியர் அணி, இந்திய 'ஏ' அணி மோதும் பயிற்சி ஆட்டம் ஜூன் 13ல் துவங்க உள்ளது.