பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டத்தில் மே 31க்குள் பதிவு செய்யலாம் முன்னோடி வங்கி மேலாளர் தகவல்

தேனி: பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா, பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீட்டு திட்டங்களில் மே 31க்குள் பிரிமியம் தொகை செலுத்தி பதிவு செய்யலாம் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயசேகர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மத்திய அரசு சார்பில் இரு காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில்பிரதமர் சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் விபத்து காப்பீடு திட்டமாகும். இத்திட்டத்தின் காப்பீட்டு தொகை ரூ. 2 லட்சம், ஆண்டு பிரிமியம் தொகையாக ரூ. 20 செலுத்த வேண்டும். விபத்தில் கை, கால்களை இழந்தால் இழப்பீடாக ரூ.ஒருலட்சம் பெற முடியும். இத்திட்த்தில் 18 முதல் 70 வயதிற்குட்பட்டவர்கள் இணையலாம். வங்கி கணக்கில் தொகை இருந்தால் தானியங்கி முறையில் பிடித்தம் செய்யப்படும்.

பிரதமர் ஜீவன்ஜோதி பீமா யோஜனா திட்டம் விபத்து, இயற்கை மரண காப்பீட்டு திட்டமாகும். இதற்கு ஆண்டிற்கு பிரிமியம் தொகையாக ரூ. 436 செலுத்த வேண்டும். இதில் விபத்து, இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீட்டு தொகை பெறலாம்.இத்திட்டத்தில் 18 முதல் 50 வரை உள்ளவர்கள் இணையலாம்.

இரு திட்டத்தில் பதிவு செய்திருந்தவர்கள் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் வரை காப்பீட்டு தொகை பெற இயலும். பொதுமக்கள் வெவ்வேறு வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் ஏதாவது ஒரு வங்கியில் மட்டும் காப்பீடு செலுத்த முடியும்.

இந்த காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளீர்களா என வங்கிகளை அணுகி தெரிந்து கொள்ளலாம். ஊராட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த கூறி உள்ளோம்.

Advertisement