இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி வளர்ச்சி * உதவிக்கு பி.சி.சி.ஐ., தயார்

புதுடில்லி: இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி வளர்ச்சிக்கு உதவ பி.சி.சி.ஐ., முன்வந்துள்ளது.
இந்தியாவில் வரும் 20236ல் ஒலிம்பிக் போட்டியை நடத்த மத்திய அரசு விரும்புகிறது. நமது வீரர், வீராங்கனைகளின் திறமையை பட்டை தீட்ட, தேசிய அளவில் 23 உயர்தர பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. குத்துச்சண்டை (ரோக்தக்), நீச்சல் (டில்லி), துப்பாக்கி சுடுதலுக்கு (டில்லி) மட்டும் பிரத்யேக மையங்கள் செயல்படுகின்றன. இதே போல மற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தனித்தனியாக பயிற்சி மையங்கள் அமைக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் முயற்சிக்கிறது.
சிறப்பு கூட்டம்
இதற்கு பெரு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் சிறப்பு கூட்டம் டில்லியில் நடந்தது. 58 பெரு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், அதன் துணை தலைவர் ராஜிவ் சுக்லா பங்கேற்றார். இவர் கூறுகையில்,''இந்தியாவில் இரண்டு முதல் மூன்று ஒலிம்பிக் போட்டிகளின் வளர்ச்சிக்கு உதவ பி.சி.சி.ஐ., தயாராக உள்ளது. எந்த போட்டிகள் என்பதை விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்து தெரிவிக்கலாம்,''என்றார்.
இது முதல் முறை
இதற்கு முன் பி.சி.சி.ஐ., சார்பில் 2008ல் தேசிய விளையாட்டு வளர்ச்சி நிதிக்கு ரூ.50 கோடி, 2024ல் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 8.5 கோடி கொடுக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் (2021) ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா (ரூ. 1 கோடி) உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்களுக்கு ரூ. 4 கோடி பரிசு வழங்கியது. தற்போது, முதன் முறையாக ஒலிம்பிக் போட்டிகளின் வளர்ச்சிக்கு கைகொடுக்க உள்ளது.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''வரும் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கம் வெல்வதே இலக்கு. அமெரிக்கா, ஜப்பான் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிக்கும் தனித்தனியாக பயிற்சி மையங்கள் உள்ளன. இத்தகைய வசதியை இந்தியாவிலும் ஏற்படுத்த உள்ளோம். இங்கு 100-200 சிறந்த நட்சத்திரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்,''என்றார்.

அனுமதி கிடைக்குமா
இந்தியா சார்பில் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 2008ல் தடை விதிக்கப்பட்டது. இந்திய 'பாஸ்போர்ட்' வைத்திருப்பவர்கள் மட்டுமே நமது நாட்டின் சார்பில் கலந்து கொள்ள முடியும். இதன் காரணமாக டென்னிஸ், கால்பந்து போட்டிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. உதாரணமாக டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜ் மகன் பிரகாஷ், அமெரிக்க 'பாஸ்போர்ட்' வைத்திருப்பதால் இந்தியாவுக்காக விளையாட முடியவில்லை. திறமையான வெளிநாடு வாழ் இந்திய நட்சத்திரங்களுக்கு மீண்டும் அனுமதி அளிப்பது பற்றி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

Advertisement