'சோலார்' மின் நிலையம் அமைத்து கொடுத்த கான்ட்ராக்டரிடம் ரூ.58.53 லட்சம் மோசடி

சென்னை: ஆரணி தச்சூரில் அரிசி ஆலைக்கு, 'சோலார்' மின் நிலையம் அமைத்து கொடுத்த, எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டரிடம் நம்பிக்கை தெரிவித்து, 58.53 லட்சம் ரூபாய் மோசடி செய்த, 'ஆதவன் கிரீன் ஏஜன்சி சொல்யூஷன்' நிறுவனத்தின் உரிமையாளர் பன்னீர்செல்வம் மற்றும் அரிசி ஆலை அதிபர்கள் சுரேஷ்பாபு, ஸ்வேதா ஆகியோர் மீது, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், மோசடி உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், 18வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீராமலு; எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர். இவர், சூரியசக்தியில் இயங்கும், 'சோலார்' மின் நிலையம் அமைத்து தருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும், 'ஸ்ரீ சிவசக்தி இன்ஜினியர்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
கடந்த, 2023 ஜனவரியில், திருச்சியைச் சேர்ந்த ஆதவன் கிரீன் ஏஜன்சி சொல்யூஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் பன்னீர்செல்வம் என்பவர், ஸ்ரீராமுலுவை தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, 'சென்னை நுங்கம்பாக்கம், திருமூர்த்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தச்சூரில், சுரேஷ்பாபு மற்றும் அவரது மகள் ஸ்வேதா ஆகியோர், 'ஜெயலட்சுமி ரைஸ் மில் மற்றும் ஜெயலட்சுமி ரைஸ் இண்டஸ்ட்ரீஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் அரிசி ஆலைக்கு, சோலார் மின் நிலையம் அமைக்க வேண்டும்' என, கூறியுள்ளார். இதையடுத்து, பன்னீர்செல்வம், சுரேஷ்பாபு, ஸ்வேதா மற்றும் ஸ்ரீராமலு ஆகியோர் கலந்து பேசி, 1.75 கோடி ரூபாயில் சோலார் மின் நிலையம் அமைப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
இப்பணிகளை முடித்தவுடன், எவ்வித பாக்கியும் வைக்காமல் பணம் கொடுத்து விடுவதாகவும், பன்னீர்செல்வம், ஸ்வேதா மற்றும் சுரேஷ்பாபு ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதன்படி ஸ்ரீராமலு, 1 கோடி, 70 லட்சத்து, 53 ஆயிரம் ரூபாயில் பணிகளை முடித்துள்ளார். இதற்காக, சுரேஷ்பாபு உள்ளிட்ட மூவரும், 1.12 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். மீதமுள்ள, 58.53 லட்சம் ரூபாயை, ஸ்ரீராமலுக்கு தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதுபற்றி, பன்னீர்செல்வத்திடம் ஸ்ரீராமலு கேட்டபோது, 'அரிசி ஆலை அதிபர்களான சுரேஷ்பாபு, ஸ்வேதா ஆகியோர் மீதி பணத்தை தரவில்லை. அவர்கள் தந்ததும் உங்களிடம் கொடுத்து விடுகிறேன்' என்று கூறியுள்ளார். அவரது பதிலில் திருப்தியடையாததால், ஆரணிக்கு சென்று சுரேஷ்பாபு, ஸ்வேதா ஆகியோரிடம் மீதி பணத்தை கேட்டுள்ளார். அப்போது எல்லா பணத்தையும் பன்னீர்செல்வத்திடம் கொடுத்து விட்டதாக, அவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், மூவரும் கூட்டாக சேர்ந்து, ஸ்ரீராமலுக்கு மிரட்டல் விடுத்ததுடன், 58.53 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீராமலு, டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் மீது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பன்னீர்செல்வம், சுரேஷ்பாபு, ஸ்வேதா ஆகியோர் மீது, பண மோசடி, மிரட்டல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மேலும்
-
48 மணி நேரத்தில் 2 ஆபரேஷன்... முக்கிய பயங்கரவாதி என்கவுன்டர்!
-
முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை: அண்ணாமலை 'பளீச்'
-
மே 18ல் விண்ணில் பாயும் 101வது ராக்கெட்; திருப்பதியில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு
-
படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை கற்றுக் கொடுத்தேன்: ராமதாஸ் பேட்டி
-
இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்
-
அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை