அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்; முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநரிடம் விசாரணை

1


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் எப்.பி.ஐ., இயக்குநர் ஜேம்ஸ் கோமியிடம் அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கடந்த 2013ம் ஆண்டு ஒபாமா ஆட்சியின் போது, எப்.பி.ஐ., (FBI) இயக்குநராக ஜேம்ஸ் கோமி நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, 2017ம் ஆண்டு புதிய அதிபராக டிரம்ப் முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட போது, கேமி அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.


இந்த நிலையில், கடற்கரையில் கடல் ஓடுகளை வைத்து '8647' என்ற வடிவத்தில் வைத்து பதிவு ஒன்றை கோமி போட்டிருந்தார். இது வைரலான நிலையில், தனது தந்தையும், அதிபருமான டிரம்ப்பை கொலை செய்ய வேண்டும் என்று கூறுவதாக மகன் ஜுனியர் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.


அதாவது, 86 என்பது கொலை செய்ய வேண்டும் என்று அர்த்தம்படுவதாகவும், 47 என்பது அமெரிக்காவின் 47வது அதிபர் என்பதை குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், அந்தப் பதிவை ஜேம்ஸ் கோமி நீக்கி விட்டார். மேலும், எந்த உள்நோக்கத்திலும் அந்தப் பதிவை போடவில்லை என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரானவன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.


கோமியின் இந்தப் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கிரிஸ்டி நோம், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Advertisement